கோடை மழையால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி பாதிப்பு

Published On:

| By admin

ூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் உப்பளத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். பிப்ரவரி தொடக்கத்தில் உற்பத்தி தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம் என்பதால் அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு உற்பத்தி முடிவடையும் ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடித்தால் உப்பு உற்பத்தி பிப்ரவரி மாதம் தான் தொடங்கியது. தற்போது உற்பத்தி உயரும் நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உப்பளத் தொழிலாளர்களிடம் பேசுகையில், “வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் 30 சதவீதம் உப்பு உற்பத்தி செய்யப்படும். அதாவது சுமார் 7.5 லட்சம் டன் உப்பு இருப்பு இருக்கும் ஆனால் இந்த ஆண்டு இதுவரை 10 ஆயிரம் டன் உப்பு மட்டுமே இருப்பு உள்ளது. உப்பளங்களில் உப்பு கையிருப்பில் இல்லை. முழுவதும் தீர்ந்து விட்டது. தட்டுப்பாடு காரணமாக விலை கடுமையாக உயர்ந்து விட்டது. ஒரு டன் உப்பு அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஆனால் தற்போது வியாபாரிகள் 5 ஆயிரம் ரூபாய்க்கு கேட்கின்றனர் ஆனால் கொடுக்க உப்பு இருப்பு இல்லை. மழை தொடர்ந்தால் உற்பத்தி செய்யப்படாமல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் நிலை ஏற்படும்.” என்று வருத்தம் தெரிவித்தனர்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share