Iஉயருகிறது கல் உப்பின் விலை!

Published On:

| By Balaji

மழை சீசன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் கல் உப்புக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. விலையும் உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைக்குளம் அருகே நதிப்பாலம், உப்பூர், திருப்பாலைக்குடி, சாயல்குடி அருகே வாலி நோக்கம் திருப்புல்லாணி உள்ளிட்ட ஊர்களில் பல ஏக்கர் பரப்பளவில் உப்பள‌ பாத்திகள் உள்ளன. அங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தியும் முழுமையாக பாதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசியுள்ள உப்பளத் தொழிலாளி ஒருவர், மழை சீசன் தொடங்கி உள்ளதால் உப்பளங்களில் மழைநீர் அதிக அளவு தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை சீசன் முடிந்த பின்னர் இனி வருகிற பிப்ரவரி மாதம்தான் மீண்டும் உப்பு உற்பத்தி செய்யும் பணி தொடங்கும்.

ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு பாதுகாப்பாக பெரிய பாலிதீன் கவர்களால் மூடி வைக்கப்பட்டிருந்த கல் உப்பை கேரளா உள்ளிட்ட பல ஊர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு டன் 2,500 ரூபாய்க்கு மட்டுமே விலை போன நிலையில் தற்போது மழை சீசன் தொடங்கி உள்ளதால் உப்புக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன் ஒரு டன்னுக்கு 500 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இன்னும் நாட்கள் செல்ல செல்ல கல் உப்பு விலை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.

இதனிடையே கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக மழை சற்று ஓய்ந்து வெயில் அடித்து வருவதால் பனைக்குளம் அருகே உள்ள நதிப்பாலம் உப்பளங்களில் இருந்து ஏற்கனவே பிரித்தெடுத்து மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த கல் உப்பை சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்து லாரிகளில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு, வீட்டுத் தேவைக்காக வாங்கப்படும் காய்கறிகளையும், கல் உப்புக் கரைசலில் கழுவிய பிறகே வெட்டி சமையல் செய்யப்படுகிறது. இவற்றால் உப்பின் தேவை அதிகரித்துள்ளது. அதேபோல, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரில் கல் உப்பு, மஞ்சள்தூள் கலந்து வாய் கொப்பளிப்பது, உப்பு, மஞ்சள், வேப்பிலை கொண்டு ஆவி பிடித்தல் போன்றவற்றாலும் கல் உப்பின் மதிப்பு உயர்ந்தது.

தற்போதைய சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாலும் டீசல் விலையேற்றத்தின் காரணமாக போக்குவரத்து செலவு உயர்ந்துள்ளதாலும் கல் உப்பின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-ராஜ்**

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share