நீட் தேர்வு பயத்தால் சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள நிலையில்,மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது முதல், அதனால் தற்கொலை செய்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வு தேதி அறிவிப்பு , நீட் தேர்வு நாள், நீட் தேர்வு முடிவுகள் வரும் நாள் ஆகிய நேரத்தில் எல்லாம் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இதனால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. அதனுடைய முடிவுகள் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி வெளியானது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள வடகுமரை ஊராட்சியை சேர்ந்த கணேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் சுபாஷ்சந்திரபோஸ் ( 20). கடந்த 2019ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பை படித்து முடித்த, இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சேலம் சின்னதிருப்பதியில் உள்ள குமாரசாமிப்பட்டி ஜெய்ராம் பள்ளியில் போஸ் நீட் தேர்வை எழுதியுள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்த ஆண்டு 156 மதிப்பெண் வாங்கிய சுபாஷ் சந்திர போஸ், இந்தாண்டு 261 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்ணிற்கு இந்தாண்டும் தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்று முடிவு செய்த போஸ், வீட்டிலிருந்த களைக்கொல்லி பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து, அவரது பெற்றோர் அவரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சுபாஷ்சந்திரபோஸ் இன்று (நவம்பர் 6) காலை உயிரிழந்தார்.
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன தைரியத்தை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கவுன்சலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும்,மாணவர்களின் தற்கொலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை போஸூடன் சேர்ந்து ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,