yசேலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் தற்கொலை!

Published On:

| By Balaji

சேலம் மகளிர் கலைக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்கியிருந்த பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் தற்காலிகமாக கொரோனா தொற்றுப் பாதித்தவர்களுடன் இருந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்கியிருந்த 40 வயது மதிப்புள்ள பெண் ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொற்று பாதித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர்களுடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சேர்க்கப்பட்டு ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தங்கவைத்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இதுபோல சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவர் கொரோனா தொற்று பாதித்துக் கடந்த 30ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மணிவாசகத்துடன் தங்கியிருந்த அவரது உறவினர் மாரியம்மாள் (40) மற்றும் உறவுப் பெண் தவமணி, தவமணியின் மகன் ஏழுமலை ஆகியோர் அழைத்துவரப்பட்டு சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அறையில் கடந்த 30ஆம் தேதி தங்க வைக்கப்பட்டனர்.

பிறகு மாரியம்மாளுக்கும், அவருடன் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கும் நெகட்டிவ் வந்தது. இருப்பினும் ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் எனச் சுகாதாரத் துறை அதிகாரிகள் மாரியம்மாளிடமும், அவரது உறவினர்களிடமும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மாரியம்மாள் இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்தில் இருக்கும் மற்றொரு அறைக்குச் சென்று சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அவரது உறவுப் பெண் தவமணி உடனே சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அதிகாரிகள் தற்போது வந்து அங்கு விசாரணை செய்து வருகிறார்கள். கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தற்போது 34 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மாரியம்மாள் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரித்ததில் மாரியம்மாள் அவரது கணவரை விட்டு தனியே உறவினர் மணிவாசகரின் வீட்டில் வசித்து வருவதாகவும் கணவர் இல்லாததால் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலிலிருந்து வந்ததாகவும் இதனால் மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாரியம்மாள் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

**-சிவசு**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share