ஈரோடு மாவட்டத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் பணி நிரந்தரமும் வழங்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது சுகாதார துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்னும் திட்டத்தில் பணியாற்றும் பெண் மருத்துவப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், “மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 170 பேர் பணியாற்றி வருகிறோம். பகுதிநேர பணி எனக் கூறினாலும் நாள்தோறும் எட்டு மணி நேரம் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாத சம்பளமாக ரூ.4,500 மட்டுமே வழங்கப்படுகிறது. தினமும் 30 புதிய நபர்களை சந்தித்து அவர்களது உடல் எடை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட முழு விவரங்களைப் பெற்று பி.எஸ்.ஆர் என்னும் செயலியின் மூலமாக பதிவு செய்யும் பணியை மேற்கொள்கிறோம். நாங்கள் பிற மருத்துவப் பணியாளர்களை போலவே பணியாற்றி வருவதால் எங்களது ஊதியத்தை உயர்த்தி வழங்குவதுடன் பணி நிரந்தரமும் செய்ய வேண்டும்” என்று கோரியுள்ளனர்.
**-ராஜ்**