{மோடி கொடுத்த உத்வேகம்: பாஜகவில் இணைந்த சாய்னா

public

இந்தியாவின் பேட்மின்டன் நட்சத்திரமான சாய்னா நேவால் தனது சகோதரியுடன் நேற்று பாஜகவில் இணைந்துள்ளார்.

தீபாவளி பண்டிகையின்போது, நம் வீடு, குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களை நாம் போற்றுவோம். அத்தகைய பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் பாரத் கி லக்ஷ்மி என்று பதிவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதற்கு விளம்பரத் தூதர்களாக பி.வி.சிந்து, நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். அப்போது #bharatkilaxmi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. இதில் சாய்னா நேவாலும் தனது கருத்தைத் தெரிவித்து வந்தார்.

இதுமட்டுமின்றி பிரதமர் மோடியைக் குறித்து ட்விட்டரில் புகழ்ந்தும் பேசி வந்தார். சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் தன்னை, பாஜகவில் இணைத்துக் கொண்டார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்று கட்சியின் தேசியச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் தன்னை பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இவருடன் இவரது சகோதரி சந்திரன் ஷூவும் பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த இவர்களைக் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கட்சியின் உறுப்பினர் அட்டையையும் வழங்கினர். அதைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பிரதமர் மோடியையும் சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக பாஜகவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர், மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சந்தீப் சிங் இணைந்துள்ளனர் . இந்த வரிசையில் தற்போது சாய்னா நேவாலும் இணைந்துள்ளார். இவருக்கு ஹைதராபாத்தில் பெரிய அளவிலான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே தென்னிந்திய பகுதியான கர்நாடகாவில் கால் பதித்துள்ள பாஜக அடுத்ததாக தெலங்கானாவைக் குறி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் சாய்னா நேவால் பாஜகவில் இணைந்துள்ளார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் நான்கு இடங்களில் வென்ற நிலையில் தற்போது சாய்னா நேவால் இணைந்திருப்பது பாஜகவைத் தெலுங்கானாவில் நிலைநிறுத்தும் வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி டெல்லியில் வரும் 8ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பாஜக சார்பாகப் பிரச்சாரத்தில் சாய்னா ஈடுபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவில் இணைந்தது குறித்து சாய்னா நேவால் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி இரவும் பகலும் தொடர்ச்சியாக நாட்டுக்காக உழைக்கிறார். தற்போது பாஜகவில் இணைந்த நானும் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். நான் இதனை ஒரு அதிர்ஷ்டமாக கருதுகிறேன். பிரதமர் மோடி எனக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளார். நான் ஒரு கடின உழைப்பாளி. கடினமாக உழைப்பவர்களை நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்தியாவுக்காகப் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர். 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக்கில் கால் இறுதிச் சுற்றில் வெற்றிப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். மேலும் அரையிறுதி வரை சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்தியாவின் விளையாட்டுக்கான உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இவருக்கு 2010இல் வழங்கப்பட்டது. பத்மஸ்ரீ விருது, அர்ஜுனா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். 2016ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்மபூஷண் விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.