சத்குரு
**கேள்வி: நான் வண்டி ஓட்டும்போதெல்லாம் விபத்தில் சிக்கப் போகிறேன் என்று உள்ளுக்குள் ஒரு பயம் எழுகிறது. ஏன்?**
**சத்குரு**
நான் நேரெதிர். பிறர் ஓட்டும் வாகனங்களில் பயணிக்கும்போதுதான் எனக்குக் கவலையே வரும். நானே வண்டி ஓட்டும்போது, ஆனந்தமாக உணர்கிறேன்.
ஆபத்து என்று பயந்து எதைச் செய்யாமல் விட முடியும்?
அறையில் உட்கார்ந்திருந்தாலும் சுழலும் மின்விசிறி திடீரென்று கழன்று உங்கள் தலைமேல் விழலாம். சுவிட்சைப் போடும்போது, மின்சாரம் தாக்கலாம். மழைக்காலத்தில் இடி விழுந்து பொசுக்கலாம். வாழ்க்கையில் எதுதான் ஆபத்தில்லை?
வாகனத்தைச் சாலையில் செலுத்தும் முன், அது எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதைச் சீராகச் செலுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சாலை விதிகளை மீறாமல் போக்குவரத்தை மதியுங்கள். செய்யும் வேலையை முழுக் கவனத்தோடு செய்தால், எதற்கு பயம்?
**கேள்வி: நான் விதிகளை மீறாமல் வாகனத்தை ஒழுங்காகவே செலுத்துகிறேன். ஆனால், அதே சாலையில் பல முட்டாள்கள் பொறுப்பில்லாமல் வருகிறார்களே? குறிப்பாக, பெரிய வாகனங்கள் தடதடத்து எதிரே வந்தால், எனக்கு நடுக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை!**
**சத்குரு**
இப்படி அடுத்தவர் மீது சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளும் மனப்பான்மைதான் மிக ஆபத்தானது.
சாலையில் வரும் ஒவ்வொருவரும் அவரவர் உயிரை மதித்துத்தான் வருகிறார்கள். ஏதோ ஒருமுறை எதிர்பாராதவிதமாகத் தவறு நேரலாம். நீங்கள் மோதலாம். அல்லது உங்கள் மீது யாராவது மோதலாம். மற்றபடி, உங்களை முட்ட வேண்டும் என்று அவரோ, அவரை மோத வேண்டும் என்று நீங்களோ திட்டமிடுவதில்லை. விபத்தில் சிக்க வேண்டும் என்று யாரும் சாலைக்கு வருவதில்லை. பெரிய வாகனம் என்றாலும், அது உங்களைக் கொல்ல ஏவப்பட்ட அரக்கன் அல்ல.
உண்மையில், உங்களை மோதுவதில் யாருக்கும் ஆர்வமில்லை. உங்களை மட்டுமல்ல மற்ற வாகனங்களையும் எப்படித் தவிர்க்கலாம் என்றுதான் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் கவனமாக இருப்பார்கள். அந்தத் திறமை இல்லாதவர் யாராவது அடுத்தவர் மீது மோதலாம். அவர் திறமையற்றவராக இருக்கலாமே தவிர, முட்டாள் அல்ல!
பேருந்தைச் செலுத்துபவரை நம்பி 60, 70 பேர் தங்கள் உயிர்களையே ஒப்படைத்து, அந்த வாகனத்தில் பயணிப்பதை மறந்துவிடாதீர்கள்.
வாகனத்தைச் செலுத்தும்போது, வேறு சிந்தனையில் மூழ்கிப் போகாமல், செல்போனில் பேசிக்கொண்டு இராமல், வாகனத்திலேயே முழுக் கவனமும் செலுத்திப் பாருங்கள். எந்த விபத்தும் நேராது.
**கேள்வி: வாகனம் செலுத்துகையில், இயல்பாக எழும் அச்சத்தை எப்படி அடக்குவது?**
**சத்குரு**
அச்சத்தை அடக்குவது என்றால் என்ன? அதன்மீது ஏறி உட்கார்ந்து கொள்வதா? அப்படி அதை அசையவிடாமல், அதன் மீது அழுத்தி உட்கார்ந்து கொண்டால், என்ன ஆகும்? அதனுடன் நீங்கள் தீராத உடன்படிக்கை போட்டுக் கொண்டவராகி விடுவீர்கள். எப்போது நீங்கள் அசைந்தாலும், அது விருட்டென்று நழுவி வெளியே வரப் பார்க்கும். நீங்கள் எழுந்து நின்றால், அது வான் வரை பூதாகரமாக வளர்ந்து, படம் எடுத்து ஆடும்.
எனக்கொரு ஜோக் நினைவுக்கு வருகிறது.
ஓர் அமெரிக்கப் பெண்மணி சென்னைக்குச் சுற்றுலா வந்திருந்தார். சென்னையின் ஆட்டோக்களால் கவரப்பட்டு, அவள் ஒரு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தார். தான் செல்ல வேண்டிய இடத்தைச் சொன்னார்.
உடனே, ஆட்டோ, பந்தய வேகத்தில் சீறிப் புறப்பட்டது. சென்னையின் நெரிசலான போக்குவரத்தினூடே அந்த ஆட்டோ சடார் சடார் என்று புகுந்து புறப்பட்டு விரைய, அமெரிக்கப் பெண்மணி பயத்தில் வீறிட்டார். ஒரு திருப்பத்தில், எதிரே இரண்டு லாரிகள் ஒன்றையொன்று முந்தியவாறு குறுகலான தெருவையே அடைத்தபடி, அவள் நெஞ்சைக் கையில் பிடித்துக் கொண்டாள். ஆட்டோவை நிறுத்தச் சொல்லிக் கதறினார்.
ஆனாலும், சற்றும் வேகம் குறைக்காமல், ஆட்டோ அந்த இரண்டு லாரிகளுக்கும் இடையில் நுழைந்து புறப்பட்டது. காற்றை அதிரடிக்கும் விரைந்து திரும்பி, இறுதியாக அவர் குறிப்பிட்ட முகவரிக்கு வந்து நின்றது.
அந்த அமெரிக்கப் பெண்மணி அச்சத்தில் நடுங்கியபடி, “லாரிகளுக்கு நடுவில் அவ்வளவு சிறிய இடைவெளியில் உன்னால் எப்படி தைரியமாக வண்டியைச் செலுத்த முடிந்தது?” என்று கேட்டாள்.
“தைரியமாவது… அந்த மாதிரி ஆபத்தான சந்தர்ப்பங்களில், பயப்படக்கூடாது என்று நான் கண்களை இறுக மூடிக்கொண்டு விடுவேன்!” என்றார் ஆட்டோ டிரைவர்.
**கேள்வி : கண்களை மூடிக்கொள்வதால், அச்சம் அகன்றுவிடுமா என்ன?**
**சத்குரு**
முதலில், அச்சம் என்பது அகற்றப்பட வேண்டியதோ, அடக்கப்பட வேண்டியதோ அல்ல; அச்சம் என்பதே ஓர் அர்த்தமற்ற உணர்வு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அச்சம் என்பது அடுத்த கணத்தைப் பற்றியதுதானே? அடுத்த கணம் என்பது, இன்னும் உங்கள் அனுபவத்தில் வராத ஒரு கற்பனை! அப்படியானால், அச்சம் என்பதே கற்பனைதானே? இந்தக் கணம் பற்றிய கவனம் மட்டும் இருந்தால், அந்த அநாவசியக் கற்பனைகள் உங்களை ஏன் வதைக்கப்போகின்றன?
உண்மையில், தைரியம் அற்றவர்கள் வாகனத்தைச் செலுத்துவது மற்றவர்களுக்குத்தான் ஆபத்து! உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையென்றால், பேசாமல் பொது வாகனங்களில் செல்லுங்கள். உங்கள் வாகனத்தால், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஆபத்தில்லை; உங்களால், மற்றவர்களுக்கும் ஆபத்தில்லை. எரிபொருள் தட்டுப்பாட்டைக் கணக்கில் கொண்டால், அது நாட்டுக்கும் நல்லது.
**
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….
**
[சிறப்பு கட்டுரை: தாங்கமுடியாத சோகம் உங்களை தாக்கினால்…](https://minnambalam.com/public/2021/07/17/11/sadhguru-article-unbearable-tragedy)
�,”