சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் தொழிற்சாலைக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விஜயம் செய்த போது, 12,000ஆவது லிங்க் ஹாஃப்மேன் புஷ் ரயில் பெட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து, வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிப்பை இன்று ஆய்வு செய்தார். மேலும் அடுத்த ஆண்டுக்குள் அதிக ரயில்கள் தயாரிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
வந்தே பாரத் தயாரிப்பு சென்னை ஐசிஎஃபில் வேகமாக உள்ளது என்று டிவீட் செய்த அமைச்சர் இவற்றில் மேலும் 75 ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த புதிய ரயில்கள், ஆகஸ்ட் 15, 2023க்கு முன் தயாரிக்கத் திட்டமிடப்பட்ட பழைய மாடல்களுடன் ஒப்பிடும்போது சிறந்த மேம்படுத்தப்பட்ட பதிப்புகளாக இருக்கும்.
இந்த ரயில் நீண்ட தூர இரவுப் பயணங்களுக்கு வசதியாக ஸ்லீப்பர் கோச் கொண்டிருக்கும். புதிய ரயில்களில் ஏசி-1, ஏசி-2 மற்றும் ஏசி 3 பெட்டிகளுடன் 3 வகுப்புகள் இருக்கும். தற்போதைய வந்தே பாரத் ரயில்களில் நாற்காலி கார் இருக்கை வடிவம் மட்டுமே இருப்பதால் இது ஒரு இன்றியமையாத அப்டேட் ஆகும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள, எடை குறைந்த பெட்டிகள், டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மோட்டார்கள் உள்ளிட்டவற்றுக்கான விவரக்குறிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
2022-23ஆம் நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில் 400 கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் வாங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் ஒதுக்கீட்டின்படி, 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலுக்கு 120 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரயில்வே, கபுர்தலா, சென்னையில் உள்ள உற்பத்தித் தளங்களைத் தவிர, 200 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை அமைப்பதற்கான வசதிகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
.