பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் செவிலியர்கள் இன்று இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவ தேர்வு ஆணையத்தின் மூலம் 2015ம் ஆண்டு செவிலியர்களாக 11,000க்கும் அதிகமானோர் பணியில் அமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களுக்கு இன்னமும் பணி நிரந்த ஆணை வழங்கப்படவில்லை. 7700 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு வேண்டியும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த சில மாதங்களாகவே செவிலியர்கள் போராடி வருகிறார்கள். கடந்த வாரமும் டி.எம்.எஸ் வளாகத்தில் போராடிய இவர்கள் அரசு தங்களிடம் பேச வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருந்தனர். பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள், தேனாம்பேட்டை பகுதியில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், டி.எம்.எஸ். வளாகத்தில் இரவு முழுவதும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் அரசிடம் இருந்து உத்தரவு வரும்வரை இங்கிருந்து கலைந்து செல்வது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தனர். இதனால் போராட்டம் இரவிலும் நீடித்தது. செவிலியர்களை வெளிய செல்ல விடாமலும், வெளியிலிருந்து அவர்களுக்கு உதவி செய்வதற்கு யாரையும் உள்ளே விடாமலும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கழிவறைகளை நேற்றிரவு பூட்டியதால், செவிலியர்கள் அவதிக்குள்ளாகினர். பிறகு அலுவலக கழிவறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று
கேட்டுக் கொண்டார். காலி இடங்களுக்கு ஏற்ப ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். மேலும் செவிலியர்கள் மருத்துவ துறையின் ஓர் அங்கம். சேவை துறையில் பணியாற்றும் இவர்கள் நோயாளிகளின் நலன்கருதி, தங்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.
இருப்பினும் இரவு முழுவதும் டி.எம்.எஸ். வளாகத்தில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் இருந்தனர். இரவு முழுவதும் குடிநீர், உணவு கிடைக்காமல் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பனியிலும், கடும் குளிரிலும் அவர்கள் அங்கேயே அமர்ந்து இருந்தனர். விடிய விடிய போராட்டம் தொடர்ந்ததால் போராட்டத்தை முடக்க பல்வேறு தடைகள் மருத்துவ துறையால் ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலையில், உணவு, குடிநீர் கிடைக்காமலும், கழிவறை மூடப்பட்டதாலும் பல இன்னல்களோடு இன்று 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அரசாணை 191- இன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மேலும் இன்னும் பல கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று செவிலியர்கள் அறிவித்து உள்ளனர்.
�,”