sவைகோ மீது கொலை முயற்சி வழக்கு பதிய உத்தரவு!

Published On:

| By Balaji

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் வைகோ உட்பட 30 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரணாப் முகர்ஜி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது 2009இல் அவருக்கு கறுப்புக் கொடி காட்டிய வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் மீது கடந்த ஜூலை 6ஆம் தேதி குற்றப் பத்திரிகை வரைவு செய்யப்பட்டது. இதற்காகத் தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களோடு தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு வைகோ வந்திருந்தார்.

அப்போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர் ஒருவர் சற்று தூரத்தில் நின்றபடி வைகோவைப் பார்த்து தரக்குறைவாகப் பேசியுள்ளார். அவர் பேர் ஜெயதீஷ்ராம் என்றும் அவர் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது. வைகோ இதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் நீதிமன்றத்துக்குள் சென்றார். பின் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் பணிகள் முடித்து வைகோ வெளியே வர, அதே நபர் மீண்டும் வைகோவைப் பார்த்து அதே மாதிரியான கெட்ட வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

ஏற்கெனவே கோபமாக இருந்த மதிமுகவினர், வைகோவை காரில் ஏற்றிவிட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வந்து அந்த நபர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை மீட்டனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வைகோ உள்ளிட்ட 30 பேர் மீது, ஜெகதீஷ்ராம் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெகதீஷ்ராம் வழக்கு தொடர்ந்தார்.

மனுவை நேற்று (ஜூலை 11) விசாரித்த நீதிமன்றம், வைகோ உள்ளிட்ட 30 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share