�
தமிழகத்தில் கோடை வெயிலின் வெப்பம் கடுமையாக உள்ளது. கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் வெப்பம் 110 டிகிரியைத் தாண்டிவருகிறது. இந்நிலையில், கோடை விடுமுறையில் மூடப்பட்டுள்ள பள்ளிகள் ஜூன் மாதம் முதல் தேதியிலேயே திறக்கப்பட்டால், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பது தள்ளிவைக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மே 17ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் தமிழகக் கல்வியமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி ஆய்வாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் மார்ச் 29ஆம் தேதிக்கு முன்னதாக மார்ச் 21ஆம் தேதியே மூடப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்தபடி இருக்கிறது. இதனால், கோடை விடுமுறைக்குப் பிறகு, வழக்கமாக ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள், வெயிலால் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். மேலும், மாணவர்களுக்குத் தமிழக அரசு வழங்கும் பாடப்புத்தகம், மடிக்கணினி, மாணவர்களின் பாடப் புத்தகப்பை போன்றவற்றில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றிருக்கும்” என்று கூறினார்.�,