சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் பயன்களை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் சில்லறை விற்பனை நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைத்துள்ளன.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி மாற்றப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் சேவை வரியின் பயன்களை மக்கள் பெறும் வகையில் சில்லறை விற்பனை நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைத்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. அதன்படி, பதஞ்சலி, ஐ.டி.சி., ஹிந்துஸ்தான் யூனிலிவர், மரிகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் விலைக் குறைப்பை அறிவித்துள்ளன.
ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனமானது 250 கிராம் அளவிலான ரின் சலவைக் கட்டியின் (சோப்) விலையை 18 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகக் குறைத்துள்ளது. அதேபோல, 10 ரூபாய்க்கு விற்பனையாகும் சர்ஃப் எக்சல் பார் சோப் எடையை 95 கிராமிலிருந்து 100 கிராமாக உயர்த்தியுள்ளது. அதேபோல, பதஞ்சலி மற்றும் மரிகோ நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைத்துள்ளதாகவும், முந்தைய விலையில் பொருட்களின் எடையை அதிகரித்து விற்பதாகவும் அறிவித்துள்ளன. இதன் மூலம் ஜி.எஸ்.டியின் பயன்களை தங்களது வாடிக்கையாளர்கள் பெற்று மகிழ்வார்கள் எனவும் இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நாம் தினசரி பயன்படுத்தும் குளியல் சோப், ஷாம்பூ, எண்ணெய், டிடர்ஜெண்ட் பவுடர், டிஷ்யூ பேப்பர், நாப்கின் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டியில் 18 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,