சினிமா பாரடைசோ 30 – தேவிபாரதி
பாரதிராஜாவிடமிருந்து பிரிந்து, தான் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் பாக்யராஜ் ஏற்ற வேடமும் பயந்த சுபாவமுள்ள இளைஞரின் வேடம்தான். அந்தப் படத்தின் நாயகன் கிழக்கே போகும் ரயில் சுதாகர். நாயகி சுமதியின் மீது ஒருதலையாகக் காதல் கொள்ளும் பாக்யராஜ் கனவுக் காட்சி ஒன்றில் எம்.ஜி.ஆர். படப் பாடல் ஒன்றைப் பாடியபடி டூயட் பாடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர். போலவே மஞ்சள் நிறக் கோட் உடுத்தியிருப்பார். எனினும் அந்தக் காதல் கைகூடாமல் போய்விடும்.
அந்தப் படத்தில் லேசான ஒருவகைச் சமூக நீதி தென்படும். காதல் திருமணத்துக்கு ஆதரவளிப்பது போன்ற கதை. ஆனால் அந்தப் படத்தைப் பார்த்தால் காதல் திருமணங்களின் கதி குறித்த பீதி ஏற்படும். படத்தில் அன்றைய நகைச்சுவை மன்னன் தையல்காரராக வருவார். பாக்யராஜ் திருவிழா நாடக இயக்குநர். நான்கைந்து குழந்தைகளின் தாயான நாயகியின் அம்மா தையல் இயந்திரத்தைக் கொண்டு பிழைப்பை ஓட்டுவார். இதுபோன்ற விளிம்பு நிலை மனிதர்கள் சிலர் இந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பார்கள். நாயகன் சுதாகர் தொழிலதிபர் ஒருவரின் மகன். சுற்றி வளைத்துப் பார்த்தால் ஒருவகையான வர்க்க முரண் காதலுக்குச் சமாதி கட்டிவிடும். சமாதி என்றால் உண்மையான சமாதி. நாயகன், நாயகி, வறுமையில் வாடும் நாயகியின் அம்மா உள்ளிட்ட மொத்தக் குடும்பமும் தற்கொலை செய்துகொள்வதுடன் படம் முற்றுப்பெறும்.
அந்தப் படத்தில் சிறு வேடமொன்றில் இடம்பெற்றவர் சி.ஆர்.சரஸ்வதி. பாக்யராஜ் அரசியல் கட்சி தொடங்கியபோது சி.ஆர்.சரஸ்வதி அந்தக் கட்சியில் சேர்ந்தார். பிறகு ஜெயலலிதாவின் அன்பைப் பெற்று அஇஅதிமுகவில் சேர்ந்தார். ஜெயலலிதா இருந்தவரை செல்வாக்கோடு திகழ்ந்தவர் பிறகு டிடிவி தினகரன் அணியில் சேர்ந்து அதன் முக்கியமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் அமமுகவின் சார்பாகப் பங்கேற்று வெளுத்து வாங்குகிறார். சுவரில்லாத சித்திரங்களில் சுதாகரின் காதலுக்காக ஏங்கிய அந்த அப்பாவிச் சிறு பெண் இப்படியெல்லாம் வருவார் என யார்தான் கற்பனை செய்திருக்க முடியும்?
**பாக்யராஜ் படங்கள் சொன்ன செய்தி**
சுவரில்லாத சித்திரங்களுக்குப் பிறகு பாக்யராஜ் இயக்கி நடித்த பல படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்றன. அவரது படங்களில் நகைச்சுவைக்கும் காதலுக்கும் அதிக முக்கியத்துவம் இருந்தன. பயந்த சுபாவம் கொண்ட அப்பாவி இளைஞனாகவே தன் பாத்திரங்களைச் சித்திரித்துவந்த பாக்யராஜ், பெரும் வணிக வெற்றிகளுக்குப் பிறகு சண்டைக் காட்சிகளையும் தன் படங்களில் இடம்பெறவைத்தார். எம்.ஜி.ஆரைப் போலவே வேட்டியை இழுத்துத் தார்ப்பாய்ச்சு கட்டிக்கொண்டு வில்லன்களைப் புரட்டியெடுத்தார்.
இது நம்ம ஆளு போன்ற படங்களில் சாதிய விமர்சனக் கருத்துகள் இடம்பெற்றிருந்தன. நாயகன் பாக்யராஜ் முடிதிருத்தும் தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நாயகி பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். பாக்யராஜ் பிராமண இளைஞன் வேடம் தரித்து அவளது காதலை வென்றெடுக்க முயல்வார். சில சண்டைக் காட்சிகளுக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்கும் பிறகு நாயகியைக் கைப்பிடிப்பார். அப்போது படத்தில் இடம்பெற்ற வசனங்கள் சாதி மறுப்பை வலியுறுத்துபவையாகவும் சமூக நீதியைப் பேசுபவையாகவும் தோன்றும்.
பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்த முந்தானை முடிச்சு என்ற படம் அவருக்கு ஆச்சரியமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதில் சமூக நீதி பேசப்படவில்லை, முற்போக்குக் கருத்துகளுக்கும் இடமில்லை. படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகளில் எம்.ஜி.ஆரின் பாணியைப் பின்பற்றினார் பாக்யராஜ். படத்தில் இடம்பெற்ற முருங்கைக்காயின் மகத்துவத்தைப் போற்றும் காட்சியொன்று பெரும் புகழ் பெற்றது. அந்தக் காட்சியைப் பார்த்த தமிழ்ச் சமூகம் முருங்கைக்காயை நேசிக்கத் தொடங்கியதும், முருங்கைக்காயின் மருத்துவக் குணங்கள் ஆராயப்பட்டதும் தனித்துப் பரிசீலிக்க வேண்டிய தமிழக வரலாறு. முந்தானை முடிச்சு வெள்ளி விழா கொண்டாடியது. அது தவிர பாக்யராஜின் வேறு சில படங்களும் வசூலை வாரிக் குவித்தன.
எம்.ஜி.ஆர். அவரைத் தன் கலையுலக வாரிசு என அறிவித்ததற்கும் அவரது படங்களுக்கும் தொடர்பு எதுவும் உண்டா எனத் தெரியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆரின் மீது கடைசிவரை பாக்யராஜுக்கு மதிப்பு இருந்தது. அவரைத் தன் குருவாக வரித்துக்கொண்டார். அவரைப் போலவே சண்டை போட்டார், சமூக நீதியைப் போற்றினார். தொடக்கத்தில் முற்போக்குவாதிகள் அவரைக் கொண்டாட முற்பட்டார்கள். எம்.ஜி.ஆரின் மரணத்திற்குப் பிறகு ஒரு படத்தில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘எம்.ஜி.ஆரோடு’ நடித்துத் தன் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார் பாக்யராஜ்.
பாக்யராஜ் திரைப்படமொன்றின் வெற்றி விழாக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். அவரைத் தன் கலையுலக வாரிசு என அறிவித்ததுதான் அவருக்கு அரசியல் ஆசை உருவாகவும் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். ஆட்சியிலிருந்தபோது அதிமுகவில் இணைந்து சில பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார். எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு தனிக்கட்சி தொடங்கினார். பிறகு அதைக் கைவிட்டுவிட்டு திமுகவில் இணைந்தார். ஒரு சில தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றதாகக்கூட நினைவு. ஆனால், அவருக்கும் அரசியல் கைகொடுக்கவில்லை.
**இசையால் வென்ற நாயகன்!**
பாக்யராஜின் சமகால நாயகர்களில் ஒருவரான ராமராஜன் தன்னை எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசாகவும் அரசியல் வாரிசாகவும் அறிவித்துக்கொண்டார். விதி வலியது என்பதற்கு ராமராஜனும் உதாரணமாகத் திகழ்ந்தார். அவர் நாயகனாக நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் போன்ற சில படங்கள் வணிக ரீதியில் பெரும் வெற்றிபெற்றன. பெரும்பாலும் தென்மாவட்ட கிராமங்களின் விவசாயச் சமூகங்களின் பின்புலத்தில் உருவான காதல் கதைகள். நாயகன் ராமராஜனுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதுவும் இல்லாமலேயே அந்தப் படங்கள் வெற்றி பெற்றன. அதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்கள். இளையராஜா தன் இசையால் ராமராஜன் என்ற நாயகனை உருவாக்கினார் என்றுகூட ஒரு பேச்சிருந்தது.
கரகாட்டக்காரன் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் நூறு நாட்களைக் கடந்து ஓடிய படம். எளிய பயந்த சுபாவமுள்ள கிராமத்து இளைஞனின் வேடங்களை ஏற்று நடித்த ராமராஜன் திடீரென்று எம்.ஜி.ஆர். பாணியிலான சண்டைக் காட்சிகளில் நடிக்கத் தொடங்கினார். எம்.ஜி.ஆரைப் பின்பற்றிய மற்ற நாயகர்களைப் போலவே நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்டார். வசன உச்சரிப்பில் எம்.ஜி.ஆரை நினைவூட்ட முயன்றார். அவர் நடித்த படங்களில் எம்.ஜி.ஆர். படப் போஸ்டர்கள் தென்பட்டன. ஏழைகளுக்காக இரங்குபவராகவும் பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றுபவராகவும் சில படங்களில் தோன்றினார்.
தன்னைத்தானே எம்.ஜி.ஆரின் வாரிசு என்று அறிவித்துக்கொண்ட ராமராஜன் அரசியலில் குதித்தார், அதிமுகவில் சேர்ந்து பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் நல்லெண்ணத்தைப் பெற்று 1998 மக்களவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரது துரதிர்ஷ்டம் அந்த மக்களவை ஓராண்டில் கலைக்கப்பட்டது.
அதற்கு மேல் அவருக்கும் அரசியல் கைகொடுக்கவில்லை. தொடர்ந்து அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில ஒருவராக விளங்கிய ராமராஜன் தனது நாயகிகளில் ஒருவரான நளினியைக் காதலித்து மணந்துகொண்டார். சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தொன்றில் படுகாயமடைந்தார். பொருளாதார ரீதியாகவும் பெரும் சறுக்கல். அன்றைய முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அவருக்குச் சில உதவிகள் செய்தார். அந்த அளவுக்கு மேல் அரசியல் அவரைக் காப்பாற்றவில்லை.
**திகைக்கவைத்த டி.ஆர்.**
பாக்யராஜ், ராமராஜன் ஆகியோரது சமகாலத்தில் அறிமுகமாகிப் புகழ்பெற்ற மற்றொரு நாயகன் டி.ராஜேந்தர். வெறும் நாயகன் அல்லர் அவர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எனத் திரைப்படத் துறையின் சகல துறைகளையும் ஒரு கை பார்த்தவர். மற்ற இருவரையும்விட அரசியலில் தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர். டி.ராஜேந்தர் திரைத் துறையையும் அரசியல் அரங்கையும் திகைக்க வைக்கும் சாதனைகள் பலவற்றைச் செய்தவர் என்றுகூடச் சொல்லலாம்.
[எம்.ஜி.ஆர். பிம்பத்தின் நிழல்கள்](https://minnambalam.com/k/2019/06/05/15)
**
மேலும் படிக்க
**
**
[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)
**
**
[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)
**
**
[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”