ரஞ்சிக் கோப்பை தொடரில் 11,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்தியாவின் மூத்த வீரரான வாசிம் ஜாபர் நேற்று (நவம்பர் 21) படைத்துள்ளார்.
ரஞ்சிக் கோப்பை தொடரில் எலைட் குரூப்புகான மூன்றாம் சுற்றில் விதர்பா, பரோடா அணிகள் ஆடி வருகின்றன. இந்தப் போட்டியில் விதர்பா அணிக்காக ஆடிவரும் ஜாபர் 97 ரன்களைக் எடுத்தபோது ரஞ்சிக் கோப்பைத் தொடரில் 11,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்தப் பட்டியலில் 9202 ரன்களுடன் அமோல் மஸும்தார் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்தப் போட்டியில் தொடக்க வீரர் சஞ்சய் ராமசாமியின் விக்கெட்டை விரைவிலேயே இழந்த விதர்பா அணிக்கு வாசிம் ஜாபர், ஃபைஸ் பைசல் ஜோடி சிறப்பாக ஆடி 300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. பைசல் 151 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜாபரும் 150 ரன்களைக் கடந்து ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அக்ஷய் வட்கர் அதிரடியாக 102 பந்துகளில் 156 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து 6 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்கள் சேர்த்த விதர்பா ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
முன்னதாக இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இரானிக் கோப்பைத் தொடரில் விளையாடியபோது ஜாபர், ஒரே இன்னிங்ஸில் 250 ரன்களைக் கடந்த மூத்த வீரர் (40 வயது) என்ற சாதனையை படைத்திருந்தார். இந்தியாவின் முதல்தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 28,834 ரன்களுடன் சுனில் கவாஸ்கர் முதல் இடத்தில் உள்ளார்.�,”