முக்கொம்பு மேலணையில் மதகுகள் அடித்துச் செல்லப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 24) திருச்சி செல்லவுள்ளார்.
முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உள்ள 45 மதகுகளின் மூலமாக அணையில் இருந்து காவிரி மற்றும் கால்வாய்களுக்குத் தண்ணீர் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணையின் ஒன்பது மதகுகள் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மதகுகள் உடைந்திருந்தாலும் நீர் திறப்பு குறைவாகவே உள்ளதால் கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை எனவும் மதகுகளைச் சீரமைப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, “அணை மற்றும் கொள்ளிடம் பாலத்தின் தூண்களை முன்கூட்டியே சீரமைக்கத் தவறிய அதிமுக அரசே இந்தப் பாதிப்புகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“அணைகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கிச் செலவிடுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அதிமுக அரசு, இந்த அணைகளின் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து கணித்திடத் தவறியது ஏன்?” எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுபோன்று கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் அதிகளவு மணல் கொள்ளை நடப்பதே அணை உடைந்ததற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டியிருந்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, “இதற்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
**முக்கொம்பில் தர்ணா**
அணை உடைப்பைத் தொடர்ந்து, முக்கொம்பில் அணைக்கு அருகில் உள்ள உயர் அதிகாரிகள் அறை முன்பாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். “அணை பழைமையானது, அதனால்தான் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறுவது முற்றிலும் தவறு. சரியாகப் பராமரிக்காத காரணத்தால்தான் அணை இப்படி உடைந்ததுள்ளது” என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
“பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் பிரபாகர், தமிழக முதல்வரின் முதன்மை செயலாளர் சாய்குமார் இங்கு வருகை தந்துள்ளனர். அவர்களைச் சந்தித்து அணை உடைப்பு குறித்து பேச அனுமதி கேட்டோம். ஆனால், அவர்கள் அனுமதி தர மறுத்துள்ளனர். இது முதல்வருக்கு ஏற்பட்டுள்ள அவமதிப்பு” என்று பி ஆர் பாண்டியன் கூறியுள்ளார்.
இதனிடையே போராட்டம் குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் தர்ணா நடத்திய விவசாயிகளை வலுக்கட்டாயமாக அவ்விடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.
இந்த நிலையில், முக்கொம்பு மேலணையைப் பார்வையிட இன்று வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி செல்லவுள்ளார்.�,