sமாநில சுயாட்சி மாநாட்டுக்கு வந்துடுவீங்க!

Published On:

| By Balaji

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை அடுத்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் மமக தலைவர் ஜவாஹிருல்லாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று (ஜூலை 19) இரவு சந்தித்து நலம் விசாரித்தார்.

ஆ.ராசா, எ.வ.வேலு, ரகுமான்கான் ஆகிய திமுக முன்னோடிகளோடு ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற ஸ்டாலின் ஜவாஹிருல்லாவை பார்த்து நலம் விசாரித்தபோது, “லண்டன்ல இருந்து வந்ததும்தான் கேள்விப்பட்டேன். எப்படிண்ணே இருக்கீங்க… என்ன சொல்லாம கொள்ளாம வந்து படுத்தீட்டிங்க? இப்ப எப்படி இருக்கு?’ என்று அக்கறையோடு கேட்டார். அப்போது ஜவாஹிருல்லாவுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர் சுபைர் கான் ஸ்டாலினிடம் விளக்கினார்.

ஆறுவாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லியிருப்பதையும், இப்போது மெல்ல மெல்ல மருத்துவமனைக்குள்ளேயே வாக்கிங் சென்றுவருவதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் மருத்துவர்.

அப்போது ஸ்டாலின், ‘’ஆகஸ்டு 30ஆம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்துறோம். அதுக்குள்ள நல்லபடியா வந்துடுவீங்க’’ என்று ஜவாஹிருல்லாவை உற்சாகப்படுத்தினார். அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜவாஹிருல்லா, ‘’அக்டோபர் 7ஆம் தேதி அரசமைப்பு சட்ட மாநாடு திருச்சியில வச்சிருக்கோம். நீங்க அதுக்கு கண்டிப்பா வரணும்’’ என்று அங்கேயே மாநாட்டுக்கான அழைப்பை விடுத்தார். “தலைவர் எப்படி இருக்காரு?” என்று ஜவாஹிருல்லா கேட்டதும், நல்லா இருக்காரு. என்று ஸ்டாலின் பதிலளித்தார். 15 நிமிடங்களுக்கு மேல் உரையாடிவிட்டுப் புறப்பட்டார் ஸ்டாலின். இந்த சந்திப்பு மமக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share