Sபாலா, ஆர்யாவுக்கு பிடி வாரண்ட்!

Published On:

| By Balaji

அவன் இவன் திரைப்படம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில், இயக்குநர் பாலா மற்றும் நடிகர் ஆர்யா மீது அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது.

2011ஆம் ஆண்டு ‘அவன் இவன்’ திரைப்படம் வெளியானது. நடிகர்கள் ஆர்யா, விஷால் நடித்த இந்தப் படத்தை பாலா இயக்கி இருந்தார். கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில், சிங்கம்பட்டி ஜமீன் உருவத்தையொத்த ஒரு கேரக்டர், ஜமீன் பெயரில் இடம் பெற்றிருந்தது. அத்துடன், சிங்கம்பட்டி ஜமீனை அவமதிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றதாகப் புகார் எழுந்தது.

அதனால், சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜன் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அதில், “சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் பெயருக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில், திட்டமிட்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் லட்சக்கணக்கான மக்கள் வழிபட்டுவரக்கூடிய சொரிமுத்து அய்யனார் கோயிலையும் அவதூறாக சித்திரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் வெளியானதால், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதி மற்றும் லட்சக்கணக்கான மக்கள் வழிபடும் சொரிமுத்து அய்யனார் ஆகியோரின் பெயரை திட்டமிட்டு அவமதிக்கும் வகையில் படத்தின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஆகியோர் செயல்பட்டு இருக்கிறார்கள். அதனால், அவர்கள் மீதும் படத்தைத் தயாரித்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்கள்.

இந்த வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், கடந்த ஜூன் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோர் நீதிபதி முரளீதரன் முன்னிலையில் ஆஜரானார்கள். அப்போது, வழக்கு விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் மூவரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். எனினும் அவர்கள் ஆஜராகவில்லை.

இதைத் தொடர்ந்து அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டு நேற்று (ஜூன்29) ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அவர்கள் நேற்றும் ஆஜராகவில்லை. இது போன்று பல்வேறு காலகட்டங்களில் நடந்த விசாரணையின்போது ஆஜராகுமாறு உத்தரவிட்டும் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி முரளிதரன் ஜூலை 13ஆம் தேதி இவர்கள் மூவரும் ஆஜராக வேண்டுமென்று பிடி ஆணைப் பிறப்பித்து உத்தரவிட்டார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel