சென்னை வேளச்சேரி அருகே கால் டாக்சி ஓட்டுநரை போலீசார் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து நேற்று நள்ளிரவில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (பிப்ரவரி 12) இரவு சவாரிக்காகப் பழவந்தாங்கல்லில் இருந்து மேடவாக்கம் சென்றார். சென்னை வேளச்சேரி மேம்பாலம் அருகே வளைவில் திரும்பும்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் மகாவீர் மீது இடிப்பது போலச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர், ரஞ்சித்தைக் கடுமையாகத் திட்டியுள்ளார்.
அப்போது அங்கு வந்த மற்றொரு கால் டாக்சி ஓட்டுநர் ரஞ்சித்துக்கு ஆதரவாகக் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால், அந்த காவலர் ரஞ்சித்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த 100க்கும் மேற்பட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் நள்ளிரவு 1 மணியளவில் பள்ளிக்கரணை – வேளச்சேரி சாலையில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகளின் சமாதானப் பேச்சுவார்த்தையையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டனர் கால் டாக்சி ஓட்டுநர்கள்.
சமீபத்தில் கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலைக்கு போலீசாரின் தூண்டுதலே காரணம் என்று புகார் எழுந்தது. இந்த சூழலில் மீண்டும் டாக்சி ஓட்டுநருக்கும் போலீசாருக்குமான இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.�,