sதேர்தல் ஆணையம்- சமூக தளம் ஒருங்கிணைவு தேவை!

Published On:

| By Balaji

தேர்தல் காலங்களில் மக்களைத் திசை திருப்பும் அல்லது குழப்பும் போலிச் செய்திகளை முறியடிக்க, தேர்தல் ஆணையமும் சமூக தளங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் சார்பு அமைப்பான ie thinc அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, “போலிச் செய்திகள் தேர்தலில் ஏற்படும் தாக்கத்தைப் புரிந்துகொள்வோம்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் டெல்லியில் நேற்று (அக்டோபர் 31) நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

“போலி செய்திகள் வெளிப்படையான தேர்தலைக் கடுமையாக பாதிக்கின்றன. வாக்காளர்களை வலிமை இழக்கச் செய்து வாக்குகளை சிதைத்து விடும் வேலையை போலிச் செய்திகள் செய்துமுடிக்கின்றன. இதனைத் தடுக்க சமூக தளங்கள் தங்களுகென ஒரு சுயக்கட்டுப்பாட்டினை விதித்துக் கொள்ள வேண்டும். எல்லாவிதமான செய்திகளையும் வெளியிடமாட்டோம் என்று அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் தங்களுக்கென ஒரு எல்லை அமைத்துக் கொண்டிருப்பதைப் போல சமூக தளங்களும் தங்களுக்கென ஓர் எல்லை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் சமூக தளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பதை தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளில் தனி பிரிவாக சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கருதுகிறேன்” என்று கூறியுள்ளார் நசீம் சைதி.

இதற்கு தேர்தல் ஆணையமும் சமூக தளங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share