sதேங்காய் ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா!

Published On:

| By Balaji

தேங்காய் ஏற்றுமதி வாயிலாக அரசுக்குக் கிடைக்கும் வருவாய் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.6,448 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ஆம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிய பசிபிக் தேங்காய் சமூகத்தின் தொடக்க நாளை முன்னிட்டே தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பில் உள்ள 18 உறுப்பு நாடுகளும் தேங்காய் சார்ந்த தொழில் மேம்பாட்டில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 2) உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘சர்வதேச அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியா ஆண்டு ஒன்றுக்கு 2,437.80 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்கிறது. அதேபோல, ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 11,616 தேங்காய்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் தற்போது 20.98 லட்சம் ஹெக்டேர் பரப்புக்குத் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தேங்காய் உற்பத்தியானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.34,100 கோடி பங்களிப்பைக் கொண்டுள்ளது. அதேபோல, ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்குத் தேங்காய்களையே நம்பியுள்ளனர். 2004 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் தேங்காய் ஏற்றுமதி வாயிலாக இந்தியாவுக்கு ரூ.3,975 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. ஆனால், 2014 முதல் 2018 வரையில் தேங்காய் ஏற்றுமதி வாயிலான வருவாய் ரூ.6,448 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், தேங்காய் எண்ணெய்யும் மலேசியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குக் காய்ந்த தேங்காய்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.’�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share