போராட்டக் களத்தில் மின்னம்பலம்
பியர்சன் லினேக்கர். ச.ரே
தங்கள் கல்வியிலும் உரிமைக்கான போராட்டத்திலும் துணை நின்ற தங்களின் இரு ஆசிரியர்களைப் பணி நீக்கம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தங்களுக்கு தங்கள் ஆசிரியர்கள் திரும்ப வேண்டும் என்றும் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக உணர்வுவெழுச்சியோடு போராடி வருகிறார்கள் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள்.
12.02.2019 இரவு பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஒன்று பெண்கள் விடுதியின் நேரக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது, மற்றொன்று விதிகளை மீறியதாகச் சொல்லிப் பணி நீக்கம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் இருவரை மீண்டும் பணியில் அமர்த்துவது.
**காரணம் என்ன?**
பெண்கள் விடுதியின் காப்பாளராக ஆங்கிலத் துறையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கும் உதவிப் பேராசிரியர்களான ஆழியரசியும் சரண்யாவும் நிர்வாக விதிகளை மீறி நடந்ததாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களைப் பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து மாணவர்கள் போராடி வருகிறார்கள். நேரக் கட்டுப்பாடு தொடர்பான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் கோரிக்கையையொட்டி மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையில், துணைவேந்தர்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
எந்தவித முன்னறிவிப்பும் காரணமுமின்றி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது என்கிறார்கள் மாணவர்கள். மாணவர்களின் சார்பாக இருந்ததால்தான் அந்த ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் அதை எதிர்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம் என்று மாணவர்கள் கூறுகின்றனர்.
16.02.19 அன்று உதவிப் பேராசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அதில் மூன்று மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அந்தப் போராட்ட முறைமையைக் கைவிட்டு நூதனமான முறையில் வெவ்வேறு வடிவங்களில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்த விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசிய தொடர்பியல் துறை மாணவரான தீப்தி, “பெண்கள் விடுதியில் நேரக் கட்டுப்பாட்டுப் பிரச்சினை ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. இரவு 9.30 மணிக்குள் உள்ளே வந்துவிட வேண்டும். இந்த நடைமுறையே பிரச்சினைக்குரியது. காரணம் பலருக்கும் 6.30 மணி முதல் 8.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அதை முடித்துவிட்டு நூலகத்தில் சற்று நேரம் படித்துவிட்டு வருவதற்குச் சற்று நேரம் அதிகமெடுப்பதால் சரியான நேரத்துக்கு உள்ளே வர முடியாது. புறநகர்ப் பகுதியில் இருக்கும் இந்த விடுதிகளுக்குள்ளே எவ்வளவு நேரம்தான் இருப்பது? திறந்தவெளி வளாகம் சற்று விடுதலை உணர்வைக் கொடுக்கும் என்று சற்றுக் கூடுதலாக நேரம் செலவழிப்பதும் உண்டு. இதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை’’ என்கிறார்.
“பெண்களுக்கான நேரக்கட்டுப்பாட்டை தளர்த்தப் பல முறை கோரியும் நிர்வாகம் சற்றும் செவிமடுக்கவில்லை. இந்த நடைமுறைச் சட்டங்கள் பாரபட்சமாகவும் பாகுபாடுகள் நிறைந்ததாகவும் இருக்கின்றன என்று கருதிய அந்த இரண்டு ஆசிரியர்கள்தான் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். அவ்விரு ஆசிரியர்களும் பெண்கள். அதனால் பெண்களின் நிலையறிந்து அவ்வப்போது நேரத்தை மீறினாலும் உள்ளே அனுமதியளிப்பார்கள். இதற்காகவே பலமுறை நிர்வாகத்தின் கண்டனத்துக்கு உள்ளானார்கள்” என்றும் தீப்தி தெரிவிக்கிறார்.
“விடுதி நிர்வாகப் பொறுப்பு தங்களுக்கு வேண்டாம் என்று முன்கூட்டியே ஆசிரியர்களான ஆழியரசியும் சரண்யாவும் தெரிவித்துவிட்டார்கள். வளாகத்தில் இருக்கும் ஆசிரியர் குடியிருப்புப் பகுதியில் தங்குவதற்கு அனுமதி பெறும் முயற்சியில்தான் பதிவாளர் புவனேஸ்வரியைச் சந்தித்திருக்கிறார்கள். அப்போது அவர் சரமாரியாகத் திட்டியுள்ளார். அவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்கவே இல்லை என்று கூறப்படுகிறது. அன்று மாலை (8.2.2019) அவர்கள் பல்கலைக்கழகச் சட்டத்தை மீறிச் செயல்பட்டார்கள் என்று கூறிப் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள்” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர் ஒருவர்.
“அந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டிருந்தாலும், பல்கலைக்கழக விதிகளை மீறியிருந்தாலும், சர்வாதிகாரப் போக்கில் பதிவாளர் நடந்துகொண்டது ஏற்கத்தக்கதல்ல. எந்த ஒரு நியாயமான முறையையும் நிர்வாகம் பின்பற்றவில்லை. பல ஆசிரியர்கள் மீது வெவ்வேறு புகார்கள் இருக்கின்றன. ஆனால் அதன்மேல் இன்றளவும் நடவடிக்கை இல்லை. பணி நீக்கத்தை விசாரிப்பதற்கென்று ஒரு குழுவை அமைத்து, அதில் பல தரப்பட்ட நபர்களைத் தெரிவு செய்து விசாரணை நடத்திய பிறகே இது போன்ற முடிவுக்கு வர வேண்டும்” என்கிறார் முதுகலை கணிதவியல் படிக்கும் மாணவர் சஞ்சு.
பிப்ரவரி 12 அன்று தொடங்கி, இன்று வரை மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டச் சூழலை விளக்கும் ஆங்கிலத் துறை மாணவர் சகானாஸ், “எங்கள் கோரிக்கையை ஏற்காததால் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினோம். போராட்டம் தொடங்கி இரண்டு மூன்று நாட்கள் ஆனபோதும்கூடப் பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. துணைவேந்தர் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார்கள். ஆனால் அதே வேளையில் மாணவர்களின் பெற்றோரையும் துறைத் தலைவர்களையும் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர். மிரட்டல் தொனியுடன் அணுகுவதால் பெருபாலானவர்கள் அச்சப்படுகிறார்கள். எங்களுக்கும் அறிவு இருக்கிறது. நாங்களும் சிந்தித்துதான் செயல்படுவோம் என்பதை நம்ப மறுக்கிறார்கள்” என்கிறார் .
“சமூக வலைத்தளத்தில் இது குறித்து எழுதிய என்னை இந்த மாதிரி வேலைகளைச் செய்வதானால் பாகிஸ்தானுக்குப் போ என்றார் புலத்தலைவர் நாகராஜன்” என்று சஞ்சு தெரிவிக்கிறார்.
புலத்தலைவர்கள் நாகராஜன், சுதா கவிதா, ராஜகோபால் ஆகியோர் மீது மாணவர்கள் புகார் சொல்கிறார்கள். புலத்தலைவர் நாகராஜிடம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களைப் பற்றிக் கேட்டபோது, “பலமுறை கண்டித்தும் அந்த ஆசிரியர்கள் விதிகளை மீறியே நடந்தார்கள். கேள்வி கேட்டால் முறையான பதில் சொல்லவில்லை. தகாத வார்த்தைகளிலும் பேசியுள்ளார்கள். அதனால்தான் நிர்வாகம் இந்த முடிவை எடுத்தது” என்று நிர்வாகத்தின் முடிவை ஆதரித்துப் பேசுகிறார்.
போராடும் மாணவர்களை பாகிஸ்தானுக்குப் போ என்று நீங்கள் கூறுவதாகச் சொல்லப்படுகிறதே என்று கேட்டதற்கு, “அப்படியெல்லாம் சொல்லிவிட்டு இருக்க முடியுமா? பசங்க ஏதாவது சொல்லுவார்கள். அவர்கள் பின்னாடி யாரோ இருந்து இயக்குகிறார்கள். அவங்க சொல்றதெல்லாம் நம்பாதீர்கள்” என்கிறார்.
பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் ஞாயிறு இரவு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பல்கலைக்கழகத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பலர் செயல்படுவதாகவும், அது போன்ற செயல்பாடுகள் நடந்தால் பல்கலைக்கழகம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் இதற்காக ஒரு ‘நோடல்’ அதிகாரியை நியமித்திருக்கிறார்கள். அவருக்குத் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியின் மீதும் அவருக்கு அதிரடி நடவடிக்கை எடுக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகிறது.
துணைவேந்தர் தங்களைச் சந்திக்காததால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நிர்வாகத் தரப்பிலோ, துணைவேந்தர் விரைவில் மாணவர்களைச் சந்திப்பார் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
“விவாதங்களைத் தடைசெய்வதன் மூலமோ, விவாதங்களை விரும்புகிற பேராசிரியர்களைப் பணி நீக்கம் செய்வதாலோ பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கக்கூடிய ஜனநாயகச் செயல்பாட்டின் மூலமே போராட்டங்களுக்குத் தீர்வு காண முடியும் என்பதை உணர்ந்து நிர்வாகம் மாணவர்களை அழைத்துப் பேச வேண்டும்” என்கிறார் முன்னாள் தொடர்பியல் துறையின் மாணவர் சிபி நந்தன்.
வெளிப்படையான உரையாடலை மேற்கொள்வதுதான் ஆரோக்கியமான கல்விச் சூழலுக்கு அடித்தளம் என்னும் மாணவர்களின் ஒட்டுமொத்த அறைகூவல் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது.
*(கட்டுரையாளர் காயிதேமில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் பயிலும் மாணவர்)*
�,”