தமிழகத்தில் இதுவரை ரூ.208.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர வருமான வரித் துறையினரும் ஆங்காங்கே ரெய்டு நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களாக திமுக பொருளாளர் துரைமுருகனுக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் தமிழகத்தில் வாகன தணிக்கையில், இதுவரை ரூ.208.55 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானம், தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (ஏப்ரல் 1) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தினசரி பறிமுதல் செய்யப்படும் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கத்தின் விவரத்தைத் தேர்தல் ஆணையம் நேற்று வரை நாடு முழுவதும் ரூ.1460.02 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் 340.748 கோடி ரொக்கமும், 143.845 கோடி ரூபாய் மதுபான வகைகளும், 692.649 கோடி ரூபாய் போதைப் பொருட்களும், 255 கோடி ரூபாய் தங்க, வெள்ளி நகைகளும் அடங்கும்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 500 கோடி ரூபாய்க்கு நார்கோடிக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர 9.92 மதிப்பிலான பணம், நகைகள் என மொத்தம் 509.92 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. குஜராத்தைத் தொடர்ந்து தமிழகம் (ரூ.208.55) இரண்டாவது இடத்தில் உள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரை ரூ.4.47 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.�,