+
பிரபல கன்னட நடிகர் உபேந்திரா தனிக்கட்சி தொடங்கியுள்ளார். கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கன்னட நடிகரும், இயக்குநருமான உபேந்திரா, கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்தே அரசியலில் ஈடுபட இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதை அவர் மறுத்தபோதிலும் சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டுவந்தார்.
இந்நிலையில், நேற்று (அக்டோபர் 31) பெங்களூருவில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தக் கட்சிக்கு ‘கர்நாடக பிரஞ்யவந்தா ஜனதா கட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உபேந்திரா, ”மக்களால், மக்களுக்காக, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எனது கட்சி இருக்கும். சிறந்த சமூகத்தை உருவாக்கும் வகையில் திட்டங்களை முன்வைக்கும் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். கட்சியின் இணையதளமும், மொபைல் செயலியும் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படும். அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களின் கட்சி மாநிலத்தின் 224 தொகுதிகளிலும் போட்டியிடும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளைப் புகழ்ந்து அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுவந்த உபேந்திரா பாஜகவில் இணையப்போவதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது தனிக்கட்சி தொடங்கியிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.�,