மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வீழ்த்தும் நோக்கோடு ஏப்ரல் 6ஆம் தேதி முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் 10,000 சமூகச் செயற்பாட்டாளர்கள் வரை டெல்லியில் ஒன்றுகூடவுள்ளனர்.
2014ஆம் ஆண்டு தேர்தலின்போது காங்கிரஸ் அரசுக்கு எதிரான மனநிலை பரவலாக ஏற்பட்டதற்கு டெல்லி ஜந்தர் மந்தரில் அண்ணா ஹசாரே அப்போது நடத்திய தொடர் போராட்டம் ஒரு காரணமாக இருந்தது. அதைப்போலவே தற்போது பாஜக அரசுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்து 200 சிவில் சமூக அமைப்புகள் இணைந்து பொதுவான குறைந்தபட்ச திட்டம் என்ற கொள்கையை வகுத்துள்ளன. *ஜன் சரோகர்* என்ற பெயரில் ஏப்ரல் 6ஆம் தேதி டெல்லியில் உள்ள தல்கத்தோரா மைதானத்தில் மிகப்பெரிய கூட்டம் ஒன்றை நடத்த இவ்வமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
சங்கார்ஷ் மோர்ச்சா, பென்சன் பரிஷாத், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் ஒன் பில்லியன் ரைசிங் அமைப்பு, ஆதிவாசிகள் உரிமைகளுக்கான தேசிய இயக்கம், தாழ்த்தப்பட்டவர்கள் மனித உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றன. ஒட்டுமொத்தமாக சுமார் 200 சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் நாடு முழுவதுலிமிருந்து இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் போன்ற முக்கிய தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக, ஆம் ஆத்மி மற்றும் சிபிஐ கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புக் குழுவில் பெங்களூரைச் சேர்ந்த சமூக அரசியல் அமைப்பான *சம்ருத்தா பாரத் ஃபவுண்டேசன் அமைப்பு*ம் ஒன்றாக உள்ளது. அந்த அமைப்பின் இயக்குநர் புஷ்பராஜ் தேஸ்பண்டே இந்த நிகழ்ச்சி குறித்து *தி பிரின்ட்* ஊடகத்திடம் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் எங்கள் அமைப்பு அரசியல் கட்சிகளுக்கும், சிவில் சமூக அமைப்புகளுக்கும் இடையிலான பாலமாகச் செயல்படுகிறது” என்றார். பாஜகவுக்குத் தேர்தலில் தோல்வியை ஏற்படுத்த சிதைந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்தக் கூட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறுகிறார்.�,