டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வீட்டு வாசலில் சாணம் தெளியுங்கள்” என்று அமைச்சர் செல்லூர் ராஜு யோசனை தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், டெங்குவைவிடத் தங்களுடைய உட்கட்சிப் பிரச்னையைத்தான் முக்கியமாகக் கருதுகின்றனர் எனவும் கூறிவருகின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்தோ, டெங்கு காய்ச்சல் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் இன்று ( அக்டோபர் 12) மதுரை சோலை அழகுபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு சிறப்பு முகாமைத் தொடங்கிவைத்த அமைச்சர் செல்லூர் ராஜு, வீடு வீடாகச் சென்று டெங்கு பரவுவதைத் தடுப்பது குறித்த ஆலோசனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் அரசைக் குறை கூறவே ஸ்டாலின் தவறான கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார். டெங்கு காய்ச்சலை ஒழிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுவருகின்றன. மதுரையில் 3,500 அரசு ஊழியர்கள் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் ஸ்டாலினும், விஜயகாந்தும் அரசியல் செய்யக் கூடாது. டெங்குவை முழுவதுமாகத் தடுக்க வேண்டுமெனில் கொசுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “நாம் எத்தனையோ கிருமி நாசினிகள் பயன்படுத்தினாலும், பண்டைய நாகரீகமான சாணம் தெளிக்கும் முறையைக் கடைப்பிடித்தால் கிருமிகளை அண்டவிடாமல் தடுக்கலாம். கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இதை முறையாக கடைபிடிக்கலாம். அதற்காகப் பளிங்குத் தரைகளில் சாணம் தெளிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை” என்று தெரிவித்தார்.
தெர்மாக்கோல் விவகாரம், ஆட்சி அமைக்க சசிகலா பாடுபட்டார் என சமீப காலமாக அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சுக்கள் இணையவாசிகளுக்குத் தீனி போடும் வகையிலேயே அமைந்துள்ள நிலையில், வீட்டில் சாணம் தெளிக்க வேண்டும் என்ற அமைச்சரின் யோசனையையும் நெட்டிசன்கள் கேலிசெய்து வருகின்றனர். ஆனாலும் மற்ற கிருமிநாசினிகளை விடச் சாணம் சிறந்த கிருமிநாசினி என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.�,”