Sடிசம்பர் 16: கலைஞர் சிலை திறப்பு!

Published On:

| By Balaji

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறக்கப்படுகிறது என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து கலைஞரின் நினைவாக அவரது 8 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படும் என்று திமுகவினர் தெரிவித்து வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் கலைஞரின் சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் சிலையை நேரில் சென்று பார்வையிட்டு, முகத்தில் மட்டும் சில மாறுதல்கள் செய்யுமாறு சிற்பியிடம் கூறினார்.

இதற்கிடையே, அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலை வைக்க திமுக சார்பில் சென்னை மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டது. அதனடிப்படையில், அண்ணா அறிவாலயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பின்னர் சிலை வைக்கச் சென்னை மாநகராட்சி கடந்த மாதம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி கலைஞர் சிலை நிறுவப்படவுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழினத் தலைவர் கலைஞரின் சிலையை வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி, அகில இந்திய தலைவர்கள் பங்கேற்றுச் சிறப்பாக திறந்து வைக்கவுள்ளனர். ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்துக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை, நிறைவேற்றித் தந்து, தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் உள்ளங்களில் கொலுவீற்றிருக்கும் கலைஞரின் சிலை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ளது.

அதன்படி டிசம்பர் 16ஆம் தேதி கலைஞர் சிலையும், புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் ஒரே இடத்தில் திறக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு சிலையும் ஒரே இடத்தில் அமைக்கப்படவுள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் தற்போது வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலை இன்று (நவம்பர் 15) தற்காலிகமாக அகற்றப்பட்டது. அந்த இடம் சீர் செய்யப்பட்டு இரு தலைவர்களின் சிலையும் ஒரே இடத்தில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2016ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் கலைஞர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஓராண்டுக்கு பிறகு 2017 டிசம்பர் 16ஆம் தேதி அன்று அண்ணா அறிவாலயம் சென்றார். இந்நிலையில் அவர் அறிவாலயம் சென்ற அதே நாளில் தற்போது சிலை திறக்கப்படவுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share