ஜெர்மனியின் முனிச் நகரில் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பிரஷாந்த் பசரூர் மற்றும் அவரது மனைவி ஸ்மிதா பசரூர் ஜெர்மனியில் வசித்து வருகின்றனர். 2016ஆம் ஆண்டு முதல் ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தில் பிரஷாந்த் பசரூர் பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் முனிச் நகரில் கத்தியால் குத்தப்பட்டதில் பிரஷாந்த் பலியானார். அவரது மனைவி ஸ்மிதா படுகாயங்களுடன் உயிர்தப்பிவிட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் சாக்ஷி, ஷ்லோக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரு குழந்தைகளுமே தற்போது ஜெர்மனியிலுள்ள இந்திய மிஷன் அலுவலகத்தில் பாதுகாப்பாக உள்ளனர்.
இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய தம்பதியரான பிரஷாந்தும், ஸ்மிதாவும் முனிச் அருகே ஒரு குடியேறி ஒருவரால் தாக்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக பிரஷாந்த் உயிரிழந்துவிட்டார். ஸ்மிதா நலமாக உள்ளார். பிரஷாந்தின் சகோதரர் ஜெர்மனி செல்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்துவருகிறோம். பிரஷாந்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.�,