sஜெயலலிதாவின் பிரச்சார வியூகம்–மாடக்கண்ணு

public

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சில புது வரலாறுகளை எழுதிக்கொண்டிருக்கிறது. முதலில் குறிப்பிடவேண்டிய விஷயம் அந்தக் கட்சி போட்டியிடும் தொகுதிகள். 227 இடங்களில் இந்தமுறை அந்தக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதிமுக இத்தனை தொகுதிகளில் இதுவரை போட்டியிட்டதில்லை. 7 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி அவர்கள் அதிமுக தேர்தல் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து 234 தொகுதிகளிலும் இரட்டை இலையை பூக்கச் செய்திருக்கிறார் ஜெயலலிதா. கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரால்கூட நிகழ்த்தமுடியாத இமாலய சாதனை இது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

சென்னையை வெள்ளம் மூழ்கடித்திருந்தபோது, ஒரே ஒருமுறை மட்டும் ஆர்.கே.நகருக்கு விசிட் அடித்த ஜெயலலிதா, தற்போது தேர்தல் சீசன் என்பதால் களத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க சகல முஸ்தீபுகளுடன் தமிழகத்தை வலம்வர ஆரம்பித்திருக்கிறார். கடந்த 4ம் தேதி முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜெ. பிரச்சார பயணத் திட்டத்தையும் அறிவித்தார். தமிழகத்தில் 14 நாட்கள், புதுச்சேரியில் ஒரு நாள் என இரு மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 264 தொகுதிகளுக்கும் 15 நாட்களை பிரித்துக் கொடுத்துள்ளார்.

கடந்த 9ம் தேதி, சென்னை தீவுத் திடலில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆர்.கே.நகரில் அவரே வேட்பாளர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 20 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம்செய்து உரை நிகழ்த்தினார். அச்சிடப்பட்ட உரை. 43 நிமிடங்கள் வாசித்தார். ஒருநாள் ஓய்வு. 13ம் தேதி விருத்தாசலத்தில் பிரச்சாரம் செய்து 13 வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து உரை நிகழ்த்தினார். மே மாதம் 12ம் தேதி தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

ஜெயலலிதாவின் உரை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம், கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை விவரிப்பது. முல்லை பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தது, குடும்பத்துக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கியது, கறவைப் பசுக்கள் கொடுத்தது, முதியோர் ஓய்வு ஊதியத்தை உயர்த்தியது மற்றும் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கியது என, தனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ஒன்றுவிடாமல் பட்டியலிடுகிறார். அநேகமாக, இது அனைத்துக் கூட்டங்களிலும் இடம்பெறும்.

அடுத்த பாகம், உள்ளூர் விவகாரம். தான் பிரச்சாரம் செய்யும் தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை விலாவாரியாக விவரிக்கிறார். சென்னையில் பிரச்சாரம் செய்தபோது, மாநகராட்சி எல்லைக்குள் அடங்கியுள்ள 21 தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். தர்மபுரியில் பேசும்போது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான புள்ளி விவரங்களை மக்கள்முன் எடுத்துவைத்தார். 2ம் பாகத்தில் இடம்பெறும் அம்சங்கள் மேடைதோறும் மாறிக்கொண்டிருக்கும்.

கடைசிப் பகுதி, பொதுவான அரசியல். இதன் பாதிப்பகுதி மது விலக்கு குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கி, அதன் தொடர்ச்சியாக கருணாநிதியை திட்டித்தீர்ப்பது. இந்த

3ம் அடுக்கில் இடம்பெறும் உரை அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகிறது.

உதாரணத்துக்கு, மதுவிலக்கு தொடர்பாக தீவுத் திடலில் ஜெயலலிதா ஆற்றிய உரை இது.

‘இப்போது எங்கே பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் மதுவிலக்கு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தலைமுறைக்கு மதுவை அறிமுகப்படுத்திய கருணநிதியும், திமுக-வும் மதுவிலக்கு பற்றி பேசுவது விநோதமானது. மதுவிலக்கு பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், கருணாநிதியோ, திமுக-வினரோ அதுபற்றி பேசக்கூடாது’

தீவுத்திடல் கூட்டத்துக்குப்பின் திமுக, தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கை மக்களிடம் வரவேற்பு பெற்றதையடுத்து காஞ்சிபுரம் கூட்டத்தில் ஜெயலலிதா, தனது உரையை அப்டேட் செய்து இப்படிப் பேசினார்.

‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் திமுக, தனது தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என்று ஏன் அறிவிக்கவில்லை? பூரண என்ற வார்த்தையை அவர்கள் குறிப்பிடவில்லை. மதுவிலக்குக்காக சட்டம் கொண்டுவருவோம் என்றுதான் கூறியுள்ளனர். கருணாநிதி மீண்டும் தனியார்மூலம் மது விற்பனையை கொண்டுவர சூழ்ச்சி செய்கிறார்’

இது காஞ்சி பொதுக்கூட்ட பேச்சு.

தேர்தல் பிரச்சாரமோ, பொதுக்குழுவோ, திருமண மண்டபமோ, சட்டசபையோ எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கருணாநிதியை சகட்டுமேனிக்குத் திட்டுவதே ஜெயலலிதாவின் வழக்கம். ஆனால், இந்த தேர்தலில் அவர் பக்குவப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தவர் கருணாநிதி என்ற வார்த்தைப் பிரயோகம் ஜெயலலிதாவின் உரையில் கண்டிப்பாக இடம் பெறும். ஆனால், இந்தத் தேர்தலில் அவர் திரு.கருணாநிதி என்றே கூட்டங்களில் விளிக்கிறார்.

தனது உரைக்கு கூட்டம் கை தட்டாமல் இருந்தால், திருவாளர் கருணாநிதிக்கு மதுவிலக்கு பற்றிப்பேச அருகதை இல்லை என உச்சஸ்தாயியில் ஜெ. கர்ஜிக்க, கூட்டத்தினர் கை தட்டலால் அந்த பிராந்தியமே அதிர்கிறது. பிற்பகலில் கூட்டிவரப்படும் கூட்டம் அக்னிக் காற்றில் அவிந்து கொண்டிருக்க ஜெ.க்கு மட்டும் மேடையில் குளுகுளு வசதி. ஜெ.மேடைக்கு வந்து பேசிவிட்டுச் செல்லும்வரை அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் கால்கடுக்க நின்றுகொண்டே இருக்க வேண்டும். கூட்டத்துக்கு அழைத்து வரப்படும் ஆட்கள் ஜெ.பேசும்போது எந்தெந்த இடத்தில் கை தட்ட வேண்டும் என இன்ஸ்டிரக்‌ஷன் கொடுக்க சபாரி அணிந்த நபர்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருக்கின்றனர்.

ஹெலிகாப்டரில் சென்றே கடந்த சில தினங்களாக ஜெ.பிரச்சாரம் செய்தார். இரவில் ஹெலிகாப்டரில் பயணிக்கமுடியாது என்பதால், சுட்டெரிக்கும் வெயிலில் பிற்பகல் 3 மணிக்கு அவரது பிரச்சாரம் ஆரம்பிக்கும். விருத்தாசலத்தில் ஜெ. பங்கேற்ற கூட்டத்தில் 2 பேர் பலியானதையடுத்து, அவரது பிரச்சார வியூகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திங்களன்று காஞ்சிபுரத்தில் ஜெ.பொதுக்கூட்டம் மாலையில்தான் நடைபெற்றது. விருத்தாசலம் கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்து சென்றபோது நெரிசல் ஏற்பட்டதையடுத்து, காஞ்சி பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.

ஜெயலலிதா இதுவரை 5 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியுள்ளார். திமுக-வையும், கருணாநிதியையும் மட்டுமே அவர் விமர்சித்துப் பேசியுள்ளார். மறந்தும் மற்ற எந்தக் கட்சியையும் ஜெ.விமர்சிக்கவில்லை. ஒருவேளை, கூட்டணி ஆட்சி ஏற்படும் சூழல் உருவானால் இந்தக் கட்சிகளின் உதவி தேவைப்படும் என்ற முன் எச்சரிக்கையோ?�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *