கேபிள் சங்கர்
திருமணம் என்பதே நடக்குமா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறவர்கள் ஒருபுறம், தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்துக்காகவே உழைத்துத் தேயும் பெற்றோர்கள் மறுபுறம், கல்யாணம் என்கிறது வாழ்க்கையில ஒரு வாட்டி வர்றது. அதுக்கு செலவு கணக்கு பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் தாம் தூம் என்று தகுதிக்கு மீறி செலவு செய்யும் கூட்டம் இன்னொரு புறம் எனத் திருமணங்கள் பற்றிப் பேச, விவாதிக்க நிறைய இருந்தாலும், அம்பானி பையன் கல்யாணம்தான் இன்றைக்கு டாக் ஆப் தி இந்தியா. காரணம் கோலாகல விழாக்கள், விஐபி விருந்தினர்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து அனுப்பப்பட்ட அழைப்பிதழ்கள் என, வெளிநாட்டுக்காரர்கள் சொல்வது போல ‘பிக் ஃபேட் இண்டியன் வெட்டிங்’ பற்றி இந்தியாவெங்கும் பேச்சு இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை.
கரணும் தாராவும் ‘மேட் இன் ஹெவன்’ எனும் வெடிங் ப்ளானர் கம்பெனியை டெல்லியில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொழுத்த பணக்காரர்களின் திருமணங்களை நடத்துகிறார்கள். அவர்களின் ஆடம்பரம், அதற்கான முஸ்தீபுகள், பேச்சுகள் என மிக விவரமாக அந்தத் தொழிலின் பின்னணியை ஆரம்பித்த முதல் எபிசோடிலேயே மிக அழகாய் வெளிப்படுத்துகிறார்கள் திரைக்கதை ஆசிரியர்களான ஜோயா அக்தரும் ரீமாவும்.
தாரா பெரிய பணக்கார வீட்டு மருமகள். திருமணம் ஆகி ஒரு வருடம்கூட ஆகவில்லை. அவள் கணவன் ஆதிலுக்கும் அவளது நெருங்கிய தோழியான ஜாய்தாவுக்குமிடையே கள்ள உறவு இருக்கிறது. அந்த உறவை விட முடியாமல் இருவரும் தவிக்கிறார்கள். அதற்காக ஜாய்தா மன நல மருத்துவரிடம் கவுன்சலிங் போய்க் கொண்டிருக்கிறாள். கபீர், கம்பெனி வீடியோ மற்றும் எடிட் சமாசாரங்களைக் கையாளுபவன். ஜஸ்ஸி பழைய டெல்லியில் வசிக்கும் லோயர் மிடில் கிளாஸ் பெண். அவள் வாழ்க்கையில் மேட் இன் ஹெவன் ஒரு பெரிய உயரம்.
பெரும் பணக்காரர்களின் குடும்பம், அவர்கள் விரும்பும் திருமண முறைகள், தங்களது வசதியையும் பெருமையையும் பறைச்சாற்ற அவர்கள் செய்ய விரும்பும் செயல்கள், பெரிய குடும்பமாய் இருந்தாலும் அவர்கள் வெளிப்படுத்தும் சின்னத்தனங்கள் எனப் பல விஷயங்களை நுணுக்கமாய் எழுதியிருக்கிறார்கள் ஜோயா அக்தரும் ரீமாவும்.
பெரும் பணக்காரர்களின் திருமண விழாவைக் கிட்டத்தட்டக் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரையும் சரியாய் வடிவமைத்திருக்கிறார்கள். அநேகமாக எல்லா கேரக்டர்களும் ஒரே மாதிரியான ‘ஹை ஃபை’ உணர்வையே பிரதிபலிப்பதினால் கொஞ்சம் ஒட்ட மறுக்கலாம்.
இதுபோன்ற படங்களுக்கே உரிய க்ளீஷேக்கள் இதிலும் இருக்கின்றன. பெரும் பணக்காரக் குடும்பம் என்றால் அவர்களது ஆசாபாசங்கள், நடவடிக்கைகள், பெரும்பாலும் பிற்போக்குத்தனமாய், கிண்டலுக்குரியதாய் இருக்கும், குடும்ப உறவுகளில் துரோகம் செய்யும் கணவன். தோழி, லோயர் மிடில் கிளாஸ், கனவு காணும், கொஞ்சம் இம்மெச்சூரான பெண். நேர்மைக்கும் நிஜத்துக்கும் போராடும் கேரக்டர் ஆகிய க்ளீஷேக்கள் இதில் உண்டு. வெப் சீரிஸ்களில் கண்டிப்பாக முக்கிய கேரக்டர் ஒன்று லெஸ்பியனாகவோ, கேயாகவோ இருந்தே ஆக வேண்டும். அம்மாதிரியான கேரக்டர்களைக் கதையின் முக்கிய மாந்தர்கள் மிகச் சாதாரணமாய் எடுத்துக்கொண்டு வளைய வருவார்கள். மற்றவர்கள் அதை அருவருப்பாகப் பார்த்து ஒதுக்குவார்கள். இவை எல்லாமே மேட் இன் ஹெவனிலும் உள்ளன.
இப்படியான க்ளிஷேக்களை மீறி இந்த சீரிஸ் எங்கே மிளிர்கிறது என்றால் கேரக்டர்கள் உருவாக்கத்தால். கேயாக இருக்கும் கதையின் நாயகனான கரண், சின்ன வயதிலிருந்து தன் பாலின ஈர்ப்பு உள்ளவனாய் இருப்பதால் படும் கஷ்டங்கள் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. தன்பாலின விருப்பம் என்பது கிரிமினல் குற்றமாய் கருதப்பட்ட காலத்தில் கதை நடப்பதாய் காட்டப்படுகிறது. வீட்டு ஓனர் வினய் பதக் பைசெக்ஷுவலாய் வளைய வந்தாலும் சமுதாயத்தின் பார்வையில் தன்னைச் ‘சரியானவ’னாகக் காட்டிக்கொள்வதற்காகக் கரணை போலீஸில் மாட்டிவிடுகிறார். அதனால் கரணுக்கு நடக்கும் அவமானங்களை மிக விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் காட்சி. ஆணோ பெண்ணோ, கட்டாய வல்லுறவு என்பது எத்தகைய கொடுமை என்பதை இந்தக் காட்சியின் மூலம் உணர்ந்துகொள்ள முடியும்.
பெண்கள் எங்கேயும் புனிதப்படுத்தப்படவில்லை. அவர்களும் எல்லா விதமான உணர்வுகளுக்கும் கட்டுப்பட்டவர்கள்தான் என்பதையும், ஆண் சூழ் உலகில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த அம்சம், இந்தி வெப் சீரிஸில் டெம்ப்ளேட் ஆகிவிடக்கூடிய விஷயமாய் மாறிக்கொண்டிருக்கிறதை என்பதையும் இக்கதாசிரியர்கள் யோசிக்க வேண்டும்.
இக்கதையின் நாயகி தாரா மிடில் கிளாஸ் பெண். அவள் ஆசையின் வீழ்ச்சிதான் இக்கதையின் பெரும் திருப்பம். அவளுடைய மிடில் கிளாஸ் பின்புலம் கதையில் அதிகம் விவரிக்கப்படவில்லை. ஜோயா அக்தர் மிடில் கிளாஸ் கதைகளை வாழ்க்கையை ஒட்டி இன்னும் கொஞ்சம் அழுத்தமான கதையுடன் புதிய சீரிஸ்கள் எழுதலாம்.
மொத்தத்தில் மேட் இன் ஹெவன் சுவாரஸ்யமான க்ளீஷேக்களின் சங்கமம்.
[நிர்பயா கொலை வழக்கின் த்ரில் பயணம்!](https://minnambalam.com/k/2019/03/25/14)�,”