விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது சிந்துபாத் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ், அருண்குமார் இயக்கிய சிந்துபாத் இரண்டு படங்களின் கதைக்களம் வெவ்வேறாக இருந்தாலும் வெளியாகியுள்ள டீசர், டிரெய்லர்களில் சில ஒற்றுமைகள் உள்ளன.
பிரச்சினைகளுக்கு பயந்து ஓடுவதும், மேலும் பல பிரச்சினைகள் சேர்ந்து துரத்துவதும், ஒரு கட்டத்தில் நடப்பது நடக்கட்டும் என மரணம் நிகழவுள்ள ஒரு சிறு இடைவெளிக்குள் தேனின் சுவையை ருசிப்பதும் என விஜய் சேதுபதியின் குரலில் சூப்பர் டீலக்ஸ் டிரெய்லரில் ஒரு கதை சொல்லப்படும்.
அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டீசரில் பிரச்சினைகளுக்கு பயந்து விஜய் சேதுபதி கதாபாத்திரம் ஓடுவதும் ஒரு கட்டத்திற்குப் பின் திரும்பி எதிரியை துரத்துவதும் என அவரது குரலிலேயே டீசர் அமைந்துள்ளது. பிரச்சினைகளுக்கு பயந்து தெறித்து ஓடுவது இரு வீடியோக்களிலும் வெளிப்படுவதுடன் விஜய் சேதுபதியின் பின்னணி குரல் தான் இரண்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சேஸிங் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என தென்காசியில் இருந்து மலேசியா வரை சிந்துபாத் டீசரில் இடம் பெற்ற காட்சிகள் அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பாக கதை நகரும் என்பதை டீசரைப் பார்க்கும் போது உணரமுடிகிறது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என முதல் இரண்டு படங்களையும் விஜய் சேதுபதியை கதாநாயகனாகக் கொண்டு இயக்கிய அருண்குமார் மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார்.
எஸ்.என் நாகராஜாவின் ‘கே’ புரொடெக்ஷன், வான்ஸன் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. லிங்கா, விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
[சிந்துபாத் டீசர்](https://www.youtube.com/watch?v=AjM_bTcZ4Ng)�,