காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வராகப் பதவி ஏற்கப் போகும் குமாரசாமியின் கருத்து நயவஞ்சகமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கர்நாடக முதல்வராகப் குமாரசாமி மே 23ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். நேற்று (மே 20) திருச்சியில் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலுக்கு வழிபட வந்த அவர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “காவிரி விவகாரத்தில் இரு தரப்புப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’’ என்று கூறினார். குமாரசாமியின் இத்தகைய பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மே 21) வெளியிட்ட அறிக்கையில், “குமாரசாமியின் யோசனை மிகவும் ஆபத்தானது. காவிரியில் தமிழகத்திற்கு உள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் தட்டிப் பறிக்கும் செயலாகும்.
இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கர்நாடக அரசு செயல்படுத்தினால் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டுவிடும். எனவே, காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக புதிய முதல்வர் குமாரசாமி நினைத்தால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்துவோம் என்று அறிவிக்க வேண்டும்.
ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என்றால் தமிழகமும், கர்நாடகமும் பேச்சு நடத்த வேண்டும் என்று கூறுவது உச்ச நீதிமன்றம் போன்ற சட்ட அமைப்புகளையும், தமிழக மக்களையும் முட்டாள்களாக்கும் செயலாகும். காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விஷயத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தமிழகத்திற்கு முழுமையான திருப்தி அளிக்கவில்லை என்றாலும்கூட இன்றைய நிலையை எட்டத் தமிழகம் பட்ட பாடுகளும், நடத்திய சட்டப் போராட்டங்களும் ஏராளமானவை.
35 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி, அதன் மூலம் காவிரிப் பிரச்சினையில் இழந்த உரிமைகளில் ஓரளவைத் தமிழகம் மீட்டெடுத்துள்ள நிலையில், அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பதே மனசாட்சியைக் கழற்றி அடகு வைத்துவிட்டுப் பேசும் பேச்சு ஆகும். .
தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப் பிரச்சினையின் ஆழம் புரியாமல் கர்நாடக அரசுடன் பேசி காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று கூறிவருகின்றனர். இந்த யோசனைகள் காவிரிப் பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலாக்கிவிடும்.
எனவே, காவிரிப் பிரச்சினை தொடர்பாகக் கர்நாடக அரசுடன் எந்தக் காலத்திலும் தமிழக அரசு பேச்சு நடத்தக்கூடாது. மாறாகக் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்க வைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.�,