பணமதிப்பழிப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்காது என ஆர்பிஐ அதிகாரிகள் 2016, நவம்பர் 8 அன்றே கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களை அன்றுதான் பிரதமர் நரேந்திர மோடி செல்லாது என அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை தடை செய்யவும் இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்திய இந்த நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்ததாக ஆய்வறிக்கைகளும் வெளியாகியுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கோவை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், நூற்பாலைகள் போன்ற தொழில்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகின. அதிலிருந்து மீண்டு வரவே இந்நிறுவனங்களுக்கு வருடக்கணக்கில் ஆனது. ”கறுப்புப் பணம் என்பது திரைப்படங்களில் காட்டப்படுவது போல பணமாகக் குவிக்கப்பட்டு இருக்காது; அது சொத்துகளாகவும், முதலீடுகளாகவும் மாறியிருக்கும்” என அதனை விளக்கி பொருளாதார அறிஞரும், மின்னம்பலம் ஆசிரியர் குழு ஆலோசகருமான ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய பல்வேறு கட்டுரைகளை ( [கறுப்புப் பணம் ஒழிந்துவிடுமா?](https://minnambalam.com/k/2016/11/17/1479321068), [பணமதிப்பழிப்பு : மோடி அரசின் தொடரும் புரட்டு](https://minnambalam.com/k/2017/02/11/1486751427), [கறுப்புப் பண ஒழிப்பு – சொல்லும் செயலும்!](https://minnambalam.com/k/2018/03/27/19), [கறுப்புப் பண ஒழிப்பில் தோற்ற மோடி!](https://minnambalam.com/k/2017/06/30/1498761015) ) மின்னம்பலத்தில் வெளியிட்டிருக்கிறோம்.
இந்நிலையில் ரூபாய் தாளை செல்லாமல் ஆக்கினால் கறுப்புப் பணம் ஒழியாது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் வாரிய இயக்குநர்கள் சிலர் அன்றே கூறியதாக [டைம்ஸ் ஆஃப் இந்தியா](https://timesofindia.indiatimes.com/business/india-business/demonetisation-wont-curb-black-money-rbi-told-government/articleshow/68350147.cms) ஊடகம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மோடி இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சரியாக மாலை 5.30 மணியளவில் ரிசர்வ் வங்கியின் வாரிய இயக்குநர்கள் கூட்டம் நடந்ததாகவும், அந்தக் கூட்டத்தில் வாரிய இயக்குநர்கள் சிலர் அரசின் இம்முடிவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் சில வாரிய இயக்குநர்கள், “பெரும்பாலான கறுப்புப் பணம் பணமாக இல்லை. அது ரியல் எஸ்டேட் துறையில் சொத்துகளாகவும், தங்கமாகவும் மாறியுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை அந்த சொத்துகளை எந்த வகையிலும் பாதிக்காது” என்று கூறியுள்ளனர். ஆனாலும் அரசின் நடவடிக்கையை ஆர்பிஐ வாரிய இயக்குநர்கள் வெளிப்படையாக எதிர்க்காமல் ஆதரவளித்துள்ளனர்.
�,”