2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் டேட்டா பயன்பாடு 72.6 சதவிகிதம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு (அசோசேம்) மற்றும் பி.டபிள்யூ.சி. நிறுவனம் இணைந்து இந்தியாவில் அதிகரித்து வரும் டேட்டா பயன்பாடு குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதன்படி, 2017ஆம் ஆண்டில் 71,67,103 மில்லியன் மெகா பைட்டாக இருந்த டேட்டா பயன்பாடு 2022ஆம் ஆண்டில் 10,96,58,793 மில்லியன் மெகா பைட்டாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 72.6 சதவிகித வளர்ச்சியாகும். 2013ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, இந்தியர்கள் மொபைல் டேட்டாவை விட அழைப்பு சேவைகளுக்குத்தான் அதிகமாகச் செலவழித்ததாகவும், அதன் பின்னர் டேட்டா பயன்பாட்டுக்கு அதிகமாகச் செலவிட்டு வருவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
2013ஆம் ஆண்டில் அழைப்புகளுக்குச் செலவிடப்பட்ட சராசரி தொகை ரூ.214. ஆனால் மொபைல் டேட்டாவுக்கு சராசரியாக ரூ.173 மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. 2016ஆம் ஆண்டில் அழைப்புகளுக்கு ரூ.124 மற்றும் டேட்டா பயன்பாட்டுக்கு ரூ.225 செலவிடப்பட்டுள்ளது. மொபைல் டேட்டா பயன்பாட்டில் 65 முதல் 75 சதவிகிதம் அளவு வீடியோக்களைப் பார்ப்பதற்கே செலவிடப்படுகிறது. இணையப் பயன்பாடு இந்தியாவில் அசுர வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அதில் மொபைல் டேட்டா பயன்பாடு மட்டும் 56.7 சதவிகிதம் வளர்ச்சி காணும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருவதும், நெட்வொர்க் நிறுவனங்கள் டேட்டா சலுகைகளை வாரி வழங்கி வருவதும் டேட்டா பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகின்றன.�,