sஅறநிலையத் துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

Published On:

| By Balaji

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் மயில் சிலை உள்ளிட்ட சிலைகள் தொடர்பான ஆவணங்கள் அழிந்துவிட்டதாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு இந்து சமய அறநிலையத் துறை கடிதம் அனுப்பியது. இது தொடர்பாக, அறநிலையத் துறைக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

2004ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, அக்கோயிலில் வர்ணப்பூச்சு, சீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கோயிலில் இருந்த புன்னைவன நாதர், ராகு, கேது ஆகிய மூன்று சிலைகள் மாற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாகப் புதிய சிலைகள் நிறுவப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மயிலாப்பூர் கோயிலில் சிலைகள் ஏதேனும் மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தும்படி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று (நவம்பர் 1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை உள்ளிட்ட சிலைகள் தொடர்பான ஆவணங்கள் அழிந்துவிட்டதாகக் குறிப்பிட்டு இந்து சமய அறநிலையத் துறை அனுப்பிய கடிதத்தைத் தாக்கல் செய்தது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு.

தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள். ஆவணங்கள் அழிந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். “ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் புகார் நிரூபணமானால், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்து, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share