sஅரிசி உற்பத்தியில் சாதிக்கும் மாநிலங்கள்!

Published On:

| By Balaji

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவின் அரிசி உற்பத்தியில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிப்பதாக அரசு தரப்பு மதிப்பீடுகள் கூறுகின்றன.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் 2017-18ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையின் படி, 2016-17ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்திருந்தது. 2016-17ஆம் ஆண்டுக்கான நான்காவது மதிப்பீடுகளின் படி, இந்தியாவின் அரிசி உற்பத்தி 110.15 மில்லியன் டன்னாகும். இது 2013-14ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 106.65 மில்லியன் டன் அரிசியை விட 3.50 மில்லியன் டன் கூடுதலாகும். இந்த ஆண்டில் மேற்கு வங்க மாநிலம் அரிசி உற்பத்தியில் முன்னிலை வகித்தது. கடந்த நான்கு ஆண்டுகளாகவே இம்மாநிலம்தான் அரிசி உற்பத்தியில் முன்னிலை வகித்து வருகிறது.

2016-17ஆம் ஆண்டில் மேற்குவங்க மாநிலம் 1,50,23,700 டன் அரிசியை உற்பத்தி செய்திருந்தது. 2015-16, 2014-15 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளிலும் இம்மாநிலத்தில் இதே அளவு அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 2016-17ஆம் ஆண்டில் 1,37,54,000 டன்னும், 2015-16ஆம் ஆண்டில் 1,25,01,000 டன்னும், 2014-15ஆம் ஆண்டில் 1,21,67,700 டன்னும், 2013-14ஆம் ஆண்டில் 1,46,36,000 டன்னும் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப், ஒடிசா, பீகார், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிகளவில் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 2013-14ஆம் ஆண்டில் 53,49,800 டன்னும், 2014-15ஆம் ஆண்டில் 57,27,800 டன்னும், 2015-16ஆம் ஆண்டில் 75,17,100 டன்னும், 2016-17ஆம் ஆண்டில் 23,69,400 டன்னும் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்களிலேயே சிக்கிமில்தான் அரிசி உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share