தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் ஃபெப்சி இடையிலான மோதல் போக்கு உருவாகக் காரணமாக இருந்த டெக்னீஷியன் யூனியன் ஃபெப்சியில் இருந்து நீக்கப்பட்டது. தங்களை மீண்டும் ஃபெப்சியில் சேர்க்கக்கோரி டெக்னீஷியன் யூனியனை சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் ஃபெப்சிக்கும் மோதல் உருவாக முக்கிய காரணமாக இருந்தது டெக்னீஷியன் யூனியன். மதுரையில் நடந்த பில்லா பாண்டி படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் டெக்னீஷியன் யூனியனை சார்ந்தவர்கள் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர். இதனால் மோதல் உருவானது. சமாதான பேச்சுவார்த்தையின் போது இனி வரும் காலங்களில் டெக்னீஷியன் யூனியனை பயன்படுத்தப் போவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்தது. மேலும் ஃபெப்சியின் சட்ட திட்டங்களுக்கு டெக்னீஷியன் யூனியனை சார்ந்தவர்கள் கட்டுப்பட முன்வரவில்லை என்று கூறி ஃபெப்சியில் இருந்து டெக்னீஷியன் யூனியனை நீக்கினர்.
இந்நிலையில் தங்களை மீண்டும் ஃபெப்சியில் சேர்க்கக்கோரி டெக்னீஷியன் யூனியனை சார்ந்தவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெக்னீஷியன் யூனியனை ஃபெப்சியுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாததால் நேற்று (அக்.04) 500க்கும் மேற்பட்ட டெக்னீஷியன் யூனியனை சார்ந்த தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஃபெப்சி சார்பில் அதன் செயலாளர் சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சண்முகம், **”தொழிலாளர்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் ஃபெப்சி எடுக்காது. வேறு மாநில தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். டெக்னீஷியன் யூனியன் தொழிலாளர்கள் இல்லாமல் தற்போது நடைபெற்றுவரும் படப்பிடிப்புகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அதனால் விரைந்து நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறோம்”** என்று கூறியுள்ளார்.�,”