விஜய்யின் பிகில் திரைப்படம், சென்சார் குழுவினரால் இன்று(14.10.19) பார்க்கப்பட்டு U/A சர்டிஃபிகேட் பெற்றிருக்கிறது. பிகில் திரைப்படம் U சர்டிஃபிகேட் பெற்றதாக ஒரு சென்சார் சர்டிஃபிகேட் சோஷியல் மீடியாக்களில் வலம் வருகிறது. அது போலியான ஒன்று என்று தெரியாமல் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த சென்சார் சர்டிஃபிகேட்டில் இடம்பெற்றிருக்கும் தலைமை சென்சார் அதிகாரியான திலகன், 2010ஆம் ஆண்டு பதவியில் இருந்தவர். தற்போது பதவியில் இருப்பவர் லீலா மீனாட்சி.
[பிகில் சென்சார் தொடங்கியது!](https://minnambalam.com/k/2019/10/14/27/Vijay-Atlee-Bigil-movie-censor-details) என்று மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம். திரைப்படத்துறையும், ரசிகர்களும் நெருக்கமாக கவனித்து வரும் சம்பவமாக பிகில் சென்சார் அமைந்ததால், அங்கு உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தோம்.
மதிய உணவுக்குப் பிறகு பிகில் திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கிய சென்சார் குழு, இரண்டு மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடிய முழு படத்தையும் பார்த்தனர். திரைப்படம் முடிந்தபிறகு ஆலோசனை நடத்திய சென்சார் குழு திரைப்படத்துக்கு U/A சர்டிஃபிகேட் கொடுப்பதாக அறிவித்தனர். ஆனால், திரைப்படக்குழு இதனை ஏற்கவில்லை.
‘U’ சர்டிஃபிகேட் கொடுப்பதில் என்ன பிரச்சினை என்று விவாதித்த படக்குழுவினரிடம், திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறை காட்சிகளை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது சென்சார் குழு. சிறு குழந்தைகள் பெருமளவில் வரக்கூடிய மார்க்கெட் கொண்டவர் நடிகர் விஜய். U சர்டிஃபிகேட் கொடுத்தால், குழந்தைகளையும் தியேட்டருக்குள் அனுமதிக்கவேண்டிய சூழல் ஏற்படும். எனவே, இந்தப் படத்துக்கு U/A சர்டிஃபிகேட் தான் கொடுக்கவேண்டும்.
U சர்டிஃபிகேட் தான் வேண்டுமென்றால், “நாங்கள் சொல்லும் சில காட்சிகளை படத்திலிருந்து நீக்குங்கள்” என்று கூறியிருக்கின்றனர். படக்குழுவினர் நடத்திய சிறு ஆலோசனைக்குப் பிறகு “நாங்கள் U/A சர்டிஃபிகேட் வாங்கிக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கின்றனர். திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 3 கெட்டவார்த்தைகளை சென்சார் குழுவினர் மியூட் செய்திருக்கின்றனர். அரசியல் தொடர்பான வசனங்கள் எதுவும் படத்திலிருந்து நீக்கப்படவில்லை. இதில் சுவாரசியமே, சென்சார் குழு நீக்குவதற்கு பரிந்துரைத்த காட்சிகளில் தான் அந்த அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
படத்தின் முக்கியமான காட்சி-வசனம் என்பதால் எங்கள் படத்தில் எந்த வெட்டும் போடாமல் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி U/A சர்டிஃபிகேட்டை வாங்கிக்கொண்டிருக்கின்றனர் பிகில் படக்குழுவினர். பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு திரைப்படத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து அட்லீ இயக்கத்தில் உருவான விஜய்யின் மெர்சல் திரைப்படத்துக்குத்தான் U/A சர்டிஃபிகேட் கிடைத்தது. அதன்பிறகு வெளியான சர்கார் படத்துக்கும் U/A சர்டிஃபிகேட் தான். இப்போது பிகில் படத்துக்கும் U/A சர்டிஃபிகேட் கிடைத்திருக்கிறது.
பிகில் படத்தின் சென்சார் தொடர்பான தகவல்களை மும்பையிலுள்ள தலைமை சென்சார் அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கிறது தமிழக சென்சார் குழு. அங்கிருந்து தகவல் கிடைத்தபிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
�,”