கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் ரப்பர் விலை உயர தொடங்கியிருப்பது விவசாயிகளுக்குச் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் மூன்று மாதங்கள் ரப்பர் பால் வெட்டும் தொழில் முடங்கியது. இதனால் ரப்பர் ஷீட் உற்பத்தி கடுமையாக சரிவடைந்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் ரப்பர் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்து காணப்பட்டது.
குறிப்பாக டிசம்பர் முதல் வாரத்தில் கோட்டயம் சந்தையில் ஆர்.எஸ்.எஸ் 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.186 ஆகவும், ஆர்.எஸ்.எஸ் 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.183 ஆகவும், ஐ.எஸ்.எஸ் தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.170.50 ஆகவும் இருந்தது.
இந்த நிலையில் மழை தணிந்த நிலை மற்றும் ரப்பர் இறக்குமதி அனுமதி உள்ளிட்ட காரணங்களால் விலை படிப்படியாக சரிவடைந்து வந்தது. கடந்த வார இறுதியில் ஆர்.எஸ்.எஸ் 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.158 ஆகவும், ஆர்.எஸ்.எஸ் 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.154.50 ஆகவும், ஐ.எஸ்.எஸ் தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.144 ஆகவும் இருந்தது. கிலோவுக்கு ரூ.28 வரையிலான இந்த விலை வீழ்ச்சி குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த நிலையில் ரப்பர் விலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி கோட்டயம் சந்தையில் வணிகர் விலையாக ஆர்.எஸ்.எஸ் 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.161.50 ஆகவும், ஆர்.எஸ்.எஸ் 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.157 ஆகவும், ஐ.எஸ்.எஸ் தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ.145.50 ஆகவும் இருந்தது.
ரப்பரின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சிறு முன்னேற்றம் குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகளை சிறிது ஆறுதல் அடைய செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் தொற்று பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருவதால் ரப்பர் விவசாயிகள் கவலையும் அடைந்துள்ளனர்.
**-ராஜ்**
.�,