தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசை கண்டறிய பரிசோதிக்கப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்குக் கட்டணமாக ரூ.3000 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில தனியார் ஆய்வகங்களில் இதை விடக் கூடுதலாகவும் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 67 அரசு ஆய்வகங்கள் மற்றும் 174 தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை நடைபெறுகிறது. நேற்று மட்டும் 60,174 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மற்ற மாநிலங்களில் ஆர்டிபிசிஆர் கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் குறைக்கப்படவில்லை. இதுகுறித்து மநீம தலைவர் கமல்ஹாசன், “டெல்லியில் ரூ.800, மகாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000ஆகக் கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 5) தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்பில், “ஆர்டிபிசிஆர் கட்டணம் ரூ.3,000இல் இருந்து ரூ.1,200ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று பரிசோதித்தால் 300 ரூபாய் கூடுதலாக வசூலிக்கலாம். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் பரிசோதனைகள் ரூ.800ஆகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.400, தெலங்கானா மாநிலத்தில் ரூ. 500ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**�,