தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் வசூலிப்பது தொடர்பாகத் தமிழக அரசு இன்று (ஜூன் 6) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், குறிப்பாகச் சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் அதிகளவு வசூலிக்கப்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில், முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனாவுக்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் முதல்வரின் விரிவான காப்பீடு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தது.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மொத்த மக்கள் தொகையில் 77 சதவிகிதம் பேர் பயன்பெறுவர். மீதமுள்ள 23 சதவிகித பேருக்கு கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றுக்குக் கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஒர் ஆணை வெளியிடப்பட்டது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளை அணுகும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனைத் தவிர, இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் கொரோனா தொற்று கண்ட நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர்.
இதையடுத்து சுகாதாரத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிடமிருந்து பெற அனுமதிக்கப்பட வேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனது அறிக்கையினை அரசிடம் அளித்தது. இவ்வறிக்கையை ஆய்வு செய்த தமிழக அரசு, மக்கள் நலன் கருதி கீழ்காணும் கட்டணங்களை நிர்ணயிக்கவும் சில நிபந்தனைகளை விதிக்கவும் உத்தேசித்து அவ்வாறே ஆணையிடுகிறது.
அதன்படி பொது வார்டில் அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு a1 மற்றும் a2 கிரேடுக்கு ரூ.7,500 மற்றும் a3 மற்றும் a4 கிரேடுக்கு ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு a1 ,a2, a3, a4 கிரேடுக்கு ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்றும் அரசு எச்சரித்துள்ளது.
**-கவிபிரியா**�,