�ஆர்எஸ்எஸ் இயக்கம் என்பது தனிப்பட்ட சிலரின் சிந்தனைக்கோ, சில புத்தகங்களுக்கோ உட்படுவதோ, உட்பட்டதோ அல்ல என்று அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக ஆர்எஸ்எஸ் இயக்கம் பற்றி உலகளாவிய அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஆர்எஸ்எஸ் பற்றி சர்வதேச ஏடுகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் என்பது ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, ஒரு குறிப்பிட்ட சிந்தனைக்கோ சொந்தமான இயக்கமல்ல என்று அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அக்டோபர் 1ஆம் தேதி நடந்த The RSS: Roadmaps for the 21st Century என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மோகன் பகவத், “ஆர்எஸ்எஸ் என்பது சங்பரிவார் என்றும் சங் ஐடியாலஜி என்றும் அடைமொழிகளால் அழைக்கப்படுகிறது. இவை அனைத்துமே முழுமையற்றவை. டாக்டர் ஹெட்கேவார் கூட ஆர்எஸ்எஸ் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டுவிட்டதாக எங்கும் கூறிக் கொண்டதில்லை.
குருஜி கோல்வால்கர் கூட ஆர்எஸ்எஸ் நீண்ட நாள் பிரச்சாரகராக இருந்த பிறகுதான் சங்கத்தைப் புரிந்துகொள்ளவே தொடங்க முடிந்தது என்றும் கூறுகிறார். ஆர்எஸ்எஸ் என்பது இந்தியாவை இந்து தேசமாக்கும் இயக்கம் என்பதில் எந்த சமரசமும் கிடையாது. அதேநேரம் ஆர்எஸ்எஸ் என்பது தன்னை இந்து என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு மட்டுமல்ல. தன்னை இந்தியன் என்று அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்குமானதுதான் ஆர்எஸ்எஸ் இயக்கம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
�,