கந்தர்வக்கோட்டையில் ரூ.5.91 கோடி தங்கம் பறிமுதல்!

Published On:

| By Balaji

கந்தர்வக்கோட்டையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.91 கோடி மதிப்பிலான தங்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் பணம், நகைகள் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

புதுக்கோட்டைமாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தச்சன்குறிச்சியில் இன்று(மார்ச் 20) தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலம் மாவட்டத்திலிருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.91 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து நகை விநியோகிப்பு முகவரான சேலம் மாவட்டம் சின்ன வீராணம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் மோகன் மற்றும் வாகன ஓட்டுநர் மேச்சேரி தேவராஜன் மகன் சந்தோஷ்குமார் ஆகியோரிடம் தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது, சொந்தமாக நகைக் கடை வைத்திருப்பதாகவும், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளில் உள்ள தங்களுக்கு சொந்தமான நகைக் கடைகளுக்குக் கொடுப்பதற்காக இந்த தங்கத்தை கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பறக்கும் படை நடத்திய சோதனையில் இதுவரை ரூ.217 கோடி பணம், பரிசுப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share