Sபிளாஸ்மா தானம் அளித்தால் ரூ.5,000 !

Published On:

| By Balaji

பிளாஸ்மா தானத்தை ஊக்குவிக்கும் வகையில், தானம் அளிப்பவர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்று கர்நாடகா மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இதற்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசி கண்டுபிடிக்கும் வகையில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ‘இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு சோதனைக்கு உட்படுத்தியதில் வெற்றி கிடைத்துள்ளது’ என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் மருத்துவர்கள் பிளாஸ்மா சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தியாவில் முதன்முதலில் டெல்லியில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் உயிரிழப்பு குறைவதாக டெல்லி மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சூழலில் அங்கு இரண்டாவது பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டது.

பிளாஸ்மா சிகிச்சைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் பிளாஸ்மா வங்கியைத் தொடங்க சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி பிளாஸ்மா தானம் வழங்க முன்வர வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் கர்நாடகாவிலும் பிளாஸ்மா சிகிச்சை முறையை அதிகரிக்கும் வகையில் அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கர்நாடக அமைச்சர் சுதாகர் கூறுகையில், “கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், தானம் அளிப்பவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார். மேலும் அவர், வீடு வீடாகச் சென்று மக்களுக்குப் பரிசோதனை செய்து காய்ச்சல் மற்றும் அறிகுறி இருப்பவர்களை மருத்துவமனைக்கு அனுப்பும் முகாம்கள் அமைக்கப்படவுள்ளது என்றும், தொற்று பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறியும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share