:
உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கு ரூ.10,900 கோடி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் (மார்ச் 31) நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில், உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, ரூ.10,900 கோடி ஊக்கத்தொகை அளிக்கப்படும். இந்த முடிவால், இரண்டரை லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏற்றுமதி பெருகும் என்று மத்திய உணவுத்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “13 தொழில்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை அமல்படுத்துவோம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஆறு தொழில்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது, உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கு ஊக்கத்தொகை திட்டம் ஒப்புதல் பெற்றுள்ளது.
இதனால், வேலைவாய்ப்பு பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.�,