மாமல்லபுரத்தில் இன்று (அக்டோபர் 11) காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி கடற்கரையில் இருந்த குப்பைகளை அள்ளியுள்ளார்.
இந்தியா சீனா இடையேயான முறைசாரா உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதற்காகப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சென்னை வந்தனர். நேற்று இருவரும் மாமல்லபுர சிற்பங்களைச் சுற்றிப் பார்த்ததோடு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கோவளத்தில் இருந்த நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றார்.
கோவளம் பிஷர்மன்ஸ் கேவ் ஓட்டலில் தங்கியிருப்பதால், காலையில் கோவளம் பீச்சுக்கு வாக்கிங் வந்த மோடி அங்கு கிடந்த குப்பைகளைக் கண்டதும் சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளார். கையில் எந்த கிளவுசும் இல்லை, காலில் செருப்பும் இல்லை, வெறும் கைகளாலேயே கையில் ஒரு பிளாஸ்டிக் கவரை வைத்துக் கொண்டு, கண்ணில் பட்ட குப்பைகளை அள்ளி போடும் வீடியோவை அவருடன் இருந்த அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். சுமார் 30 நிமிடம் இந்த சேவையை அவர் மேற்கொண்டதாகத் தெரிகிறது. தான் கேகரித்த குப்பைகளை ஓட்டல் ஊழியர் ஜெயராஜிடம் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், பொது இடங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தூய்மை இந்தியா திட்டம் ஆரம்பித்தது முதல், எல்லா தலைவர்களும் பொது இடங்களில் அவ்வப்போது தூய்மை பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது தமிழகம் வந்துள்ள மோடியும் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
**பேச்சுவார்த்தை**
இன்று காலை கோவளம் பிஷர்மேன்ஸ் கேவ் ஓட்டலுக்கு வந்த சீன அதிபரை, பிரதமர் மோடி பேட்டரி காரில், பேச்சுவார்த்தை நடைபெற்ற அரங்கிற்கு அழைத்து சென்றார். பின்னர் சுமார் 1 மணி நேரம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் . இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல ஆண்டுகளாக ஆழமான கலாசார வர்த்தக உறவுகள் இருக்கின்றன. இந்தியா-சீனா உறவுகளில் ஒரு புதிய சகாப்தம் சென்னையில் தொடங்கியிருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் பயணம் மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது இருநாடுகளிடையே ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு ஏற்படும் பிரதமர் மோடியுடன் நண்பர்களாக நாங்கள் பேசினோம் என்று சீன அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
�,”