திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ரூ1.32 லட்சம் கொள்ளை!

Published On:

| By Balaji

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டருக்குள் புகுந்த கொள்ளையர்கள் ரூ.1.32 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

பொதுவாகவே பறக்கும் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறைந்த கட்டணம் மற்றும் வசதியான பயணம் ஆகியவற்றின் காரணமாக மக்கள் பேருந்துகளைவிட பறக்கும் ரயிலில்தான் பயணம் செய்வார்கள். குறிப்பாக, திருவான்மியூர் ரயில் நிலையம் பிஸியாக இருக்கும். அங்கே டைடல் பார்க் இருப்பதால், காலையிலும், மாலையிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

இந்த நிலையில் இன்று(ஜனவரி 3) காலை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க பயணிகள் கவுன்டருக்குச் சென்றபோது அது மூடியிருந்தது. நீண்ட நேரமாக டிக்கெட் கவுன்டர் திறக்கப்படாததால், அதுதொடர்பாக ரயில்வே போலீசாரிடம் மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த ரயில்வே போலீசார் கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஊழியர்கள் அனைவரும் கட்டிபோட பட்டிருப்பதையும், அங்கிருந்த ரூ.1.32 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ரயில்வே போலீசார் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில், காலையில் மூன்று பேர் திடீரென்று டிக்கெட் கவுன்டருக்குள் நுழைந்து எங்களின் கையை கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து அடைத்து விட்டு ரூ.1.32 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என்று டிக்கெட் விற்பனையாளர் டீக்காராம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுன்டரில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் பட்டப்பகலில் நடந்த இந்தகொள்ளைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share