தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்த வீடியோ ட்விட்டரில் வேகமாகப் பரவி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள பாரேரி என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் விபத்தில் சிக்கினார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது.
இந்நிலையில், சென்னையிலிருந்து புதுக்கோட்டை செல்வதற்காக அவ்வழியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், உடனடியாக காரை நிறுத்தி இளைஞருக்கு முதலுதவி செய்தார். இளைஞரின் முகத்தில் வழிந்த ரத்தத்தைத் துடைத்து பின்னர், தலையில் அடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் வெளியேறாதவாறு வெள்ளைத் துணியால் அழுத்திப் பிடித்து முதலுதவி செய்தார்.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞர் துரிதமாக செயல்பட்டு முதலுதவி செய்து காப்பாற்றிய அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள். @Vijayabaskarofl
*Sensitive Content Alert* pic.twitter.com/tZmu7F3s0e
— அஇஅதிமுக (@ADMKofficial) August 22, 2020
பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அமைச்சரின் இந்த மனிதாபிமான செயலுக்கு அங்குக் கூடியிருந்தவர்கள் அனைவரும் பாராட்டியும், நன்றியும் தெரிவித்துச் சென்றனர்.
தற்போது அமைச்சர் உதவியது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
**-கவிபிரியா**�,”