rகிச்சன் கீர்த்தனா: சிவப்பு அரிசி பணியாரம்

Published On:

| By Balaji

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு வகை பணியாரம் கலாச்சார அடையாளமாக இருக்கிறது. செட்டிநாட்டில் அனைத்து விழாக்களிலும் பண்டிகைகளிலும் சிவப்பு அரிசி பணியாரம் தவறாது இடம்பெறும். குழிப்பணியாரம் என்பது, தென்மாவட்ட மக்களின் விருப்பத்துக்குரிய உணவு. பருப்புப் பணியாரத்தை டெல்டா பகுதி மக்கள் விரும்பி உண்கிறார்கள். நீங்களும் இந்த சிவப்பு அரிசி பணியாரத்தைச் செய்து வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து படைக்கலாம்.

என்ன தேவை?

சிவப்பு அரிசி – 2 கப்

பொன்னி புழுங்கல் அரிசி – அரை கப்

உளுந்து – அரை கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, கிரைண்டரில் நைஸாக அரைத்து எடுத்து உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து, அதிகம் குழிவாக இல்லாத வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, நன்கு காய்ந்ததும், தீயைச் சற்றே குறைத்து வைத்துக்கொண்டு, சற்று குறைவான குழியுள்ள கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.

ஊற்றிய ஓரிரு விநாடிகளில், பணியாரம் மேலே எழும்பி வரும். உடனடியாக அதைத் திருப்பிவிட்டு, முறுகவிடாமல் எடுத்துவிட வேண்டும். இப்போது சுவையான செட்டிநாட்டு சிவப்பு அரிசி பணியாரம் தயார். இதைக் காரச் சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த வகை பணியாரங்களை கல்கத்தா சட்டியில்தான் செட்டிநாட்டு பகுதிகளில் செய்வார்கள்.

**நேற்றைய ரெசிப்பி: [செட்டிநாட்டு முருங்கைக்கீரை அடை!](https://minnambalam.com/public/2021/01/26/1/murungai-keerai-adai)**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share