மகளிர் சுய உதவிக் குழு கடன்: ஆர்பிஐக்கு நோட்டீஸ்!

public

மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடனை அடைக்கக் கேட்டு கட்டாயப்படுத்தும் சிறு கடன் நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும் ரிசர்வ் வங்கியும் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மக்கள் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏழை எளிய மக்கள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் ஊரடங்கு காரணமாகக் கடன் தவணை மற்றும் வட்டியைச் செலுத்த ரிசர்வ் வங்கி ஆறு மாதம் கால அவகாசம் வழங்கியது. எனினும் ஒரு சில வங்கிகள் , சிறு கடன் நிறுவனங்கள் கடன் மற்றும் வட்டியைச் செலுத்த வற்புறுத்துவதாகப் புகார் எழுந்தது.

குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் கொடுத்த சிறு கடன் நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்தக் கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுகந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், இந்திய ரிசர்வ் வங்கிக்கு முரணாக மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடனை வசூலிக்கும் சிறு கடன் நிறுவனங்கள் மீது அளிக்கும் புகாரைப் பெற மாவட்டம் தோறும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார் .

மேலும் கடன் மற்றும் வட்டி தொகையைச் செலுத்துவதற்கான காலக்கெடுவைச் செப்டம்பர் முதல் பிப்ரவரி 2021 வரை நீட்டிக்கத் தமிழக அரசுக்கும், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநருக்கும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

சிறு கடன் நிறுவனங்கள் மூலம் பெறப்படும் தொகை மகளிர் சுய உதவிக் குழுவில் இருக்கும் உறுப்பினர்களுக்கு 10,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இதனைக் கடன் பெற்றவர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப மாதத் தவணையாகவோ அல்லது வாரத் தவணையாகவோ செலுத்துவர்.

ஆனால் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் உறுப்பினர்கள் தவித்து வரும் நிலையில் கடனை செலுத்த வேண்டும் என்று சிறு கடன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றன என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இம்மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஊரக வளர்ச்சித் துறையை இவ்வழக்கின் எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டதோடு, இந்த மனு தொடர்பாக ரிசர்வ் வங்கியும் தமிழக அரசும் 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

**கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *