மருத்துவக் கல்லூரியில் ராகிங்: நான்கு மாணவர்கள் சஸ்பெண்ட்!

Published On:

| By Balaji

தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்த புகாரில் மூன்றாமாண்டு மாணவர்கள் நான்குபேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் மாணவர் சரவணனை மூன்றாமாண்டு படித்துவரும் நான்கு மாணவர்கள் இரவு நேரத்தில் ராகிங் செய்து வந்துள்ளனர். நள்ளிரவில் சிகரெட் வாங்கி வரச் சொல்லி மிரட்டியுள்ளனர். அதை மறுத்ததால், அரை நிர்வாணத்தில் முட்டிபோட வைத்து, மதுபாட்டிலை கொண்டு கழுத்தில் வைத்து அழுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் சரவணன் விடுதி காப்பாளரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இந்த ராகிங் தொந்தரவு தொடர்ந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான சரவணன் நேற்று மாலை அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டதோடு, இடது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த சக மாணவர்கள் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது, மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சரவணன் பெற்றோர் கூறுகையில், ”கல்லூரி விடுதியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் எனது மகனை அடித்துவிட்டார்கள். இதுகுறித்து புகார் கூறியும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. கல்லூரி விடுதியிலேயே மாணவர்கள் மது அருந்தியுள்ளனர். இது அனைத்தும் விடுதி காப்பாளருக்கு தெரிந்திருந்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்ளூர் மாணவர்களுக்கு ஆதரவாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அந்த மாணவர்கள் சரவணனை பல்வேறு விதமாகக் கொடுமைப்படுத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராஜ்குமார், சரண், கோகுல், தனன்ஜெயன் ஆகியோரை கல்லூரி விடுதியிலிருந்து வெளியேற்றியும், ஒரு வார காலத்திற்கு நான்கு மாணவர்களும் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்தும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், விடுதி காப்பாளர்களை மாற்ற வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, புதிதாக இரண்டு காப்பாளர்களை தேர்வு செய்ய உள்ளதாகவும், தினந்தோறும் விடுதியில் ஒரு மருத்துவரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share